என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கான கருத்துக்கேட்பு கூட்டம்: எங்களை கொன்று விட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் பொதுமக்கள் அறிவிப்பால் அதிகாரி அதிர்ச்சி


என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கான கருத்துக்கேட்பு கூட்டம்:  எங்களை கொன்று விட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள்  பொதுமக்கள் அறிவிப்பால் அதிகாரி அதிர்ச்சி
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

எங்களை கொன்று விட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் அறிவித்தனர். இதனால் அதிகாரி அதிர்ச்சியடைந்தார்.

கடலூர்

மந்தாரக்குப்பம்,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள 1-வது சுரங்க விரிவாக்க பணிக்காக கம்மாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வடக்குவெள்ளூர், அம்மேரி, தொப்பளிகுப்பம், ஆதண்டர்கொள்ளை, அகிலாண்டகங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடு, நிலங்களை கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் இந்திய நிர்வாகக் கல்லூரி பேராசிரியர் ரேஷ்மி நாயர் தலைமையில் நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக வடக்கு வெள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட வன்னியர் வீதி, தொல்காப்பியர் தெரு, வடக்கு வெள்ளூர் ஆகிய பகுதி மக்களிடம் இந்திய நிர்வாக கல்லூரி பேராசிரியர் ரேஷ்மி நாயர் கருத்துகளை கேட்டார்.

கொன்று விட்டு...

இதில் வன்னியர் வீதி பகுதியை மக்கள் எந்தவித கருத்துகளையும் தெரிவிக்காமல் கலைந்து சென்றனர். தொடர்ந்து தொல்காப்பியர் தெரு, வடக்கு வெள்ளூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அதில் என்.எல்.சி. சுரங்க விரிவாக்கத்திற்காக நாங்கள் வீடு, நிலம் எதுவும் கொடுக்க மாட்டோம்.

என்.எல்.சி. நிர்வாகம் அழுத்தம் கொடுத்து எங்களது வீடு, நிலத்தை கையகப்படுத்த நினைத்தால் எங்கள் அனைவரையும் கொன்று விட்டு நிலக்கரி வெட்டும் குழியில் போட்டு புதைத்து விட்டு அதன்பின்னர் எந்த செலவும் இல்லாமல் என்.எல்.சி. நிர்வாகம் எடுத்து கொள்ளலாம். இல்லையென்றால் ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் மாற்று இடம் வழங்க வேண்டும். அவ்வாறு மாற்று இடம் வழங்க கூடிய இடத்தில் 10 சென்ட் உடன் வீடுகள் கட்டித்தர வேண்டும்.

நிரந்தர வேலை

என்.எல்.சி. இந்தியா நிறுவனம், நவரத்தின தர சான்றிதழ் பெற்ற நிறுவனம். ஆகையால் அந்நிறுவனத்தின் தலைமை அதிபர், நிறுவனத்திற்கு தேவையான வேலை வாய்ப்புகளை வழங்க முழு அதிகாரம் இருக்கிறது. அத்தகைய அதிகாரத்தை பயன்படுத்தி இங்கு உள்ளவர்களுக்கு உடனடியாக நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கருத்துகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த கருத்துகளை கேட்ட இந்திய நிர்வாகக் கல்லூரி பேராசிரியர் ரேஷ்மி நாயர் அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த கருத்துகளை அறிக்கையாக தயார் செய்து, உங்களிடம் காண்பித்து சரி என்று தெரிவித்த பின்னர் மாவட்ட கலெக்டருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார்.


Next Story