பொலிவிழந்து நிற்கும் பிரமாண்ட தலையாட்டி பொம்மைகள்


பொலிவிழந்து நிற்கும் பிரமாண்ட தலையாட்டி பொம்மைகள்
x

தஞ்சை மாநகரில் பொலிவிழந்து நிற்கும் பிரமாண்ட தலையாட்டி பொம்மைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாநகரில் பொலிவிழந்து நிற்கும் பிரமாண்ட தலையாட்டி பொம்மைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தலையாட்டி பொம்மை

தஞ்சை என்றாலே நினைவுக்கு வருவது தலையாட்டி பொம்மைகள் தான். அந்த அளவுக்கு தலையாட்டி பொம்மைகள் சிறந்து விளங்குகிறது. இந்த பொம்மையின் அடிப்பாகம் பந்து போன்று வளைவான வடிவத்துடன் இருப்பதால் பொம்மையை எந்த பக்கம் சாய்த்தாலும் சாயாமல் நிமிர்ந்து நிற்கும்.தலையாட்டி பொம்மைகள் பெரும்பாலும் 1 அடி உயரத்தில் காணப்படும். இவை ராஜா, ராணி என 2 விதமாக தயார் செய்யப்படும். இந்த பொம்மைகள் ஜோடி ரூ.150 முதல் விற்பனை செய்யப்படும். சிலர் உயரமான பொம்மைகள் வேண்டும் என்று கேட்டால் 5 அடி உயரத்தில் தயார் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாங்கி செல்லும் பொருட்களில் தலையாட்டி பொம்மைகளுக்கு தனி இடம் உண்டு.

பெரிய கோவில் குடமுழுக்கு

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந்தேதி விமர்சையாக நடந்து முடிந்தது. இதைமுன்னிட்டு கோவிலுக்கு வருபவர் வரவேற்கவும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் முக்கிய சந்திப்புகள், தஞ்சை மாநகருக்குள் நுழையும் இடங்களில் தலையாட்டி பொம்மைகள் வைக்கப்பட்டன.குறிப்பாக ரெயில் நிலையம், தொல்காப்பியர் சதுக்கம், ராஜராஜசோழன் ரவுண்டானா, பெரிய கோவில் மேம்பாலம் ரவுண்டானா, அரண்மனை வளாகம், மணிமண்டபம் உள்பட 10 இடங்களில் பிரமாண்டமான தலையாட்டி பொம்மைகள் வைக்கப்பட்டன. இவற்றின் அடிப்பாகம் 2 அடி உயரமும், அதற்கு மேல் 10 அடி உயரமும் என மொத்தம் 12 அடி உயரம் கொண்டது.

பொலிவிழந்த பொம்மைகள்

ஒரே பொம்மையில் ஒருபுறம் ராஜா உருவமும், மற்றொரு புறம் ராணியின் உருவமும் இடம் பெற்றுள்ளன. இந்த தலையாட்டி பொம்மைகளை பெரியகோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் அமைத்திருந்தன. இவற்றை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் மேற்கண்ட பகுதியில் உள்ள பொம்மைகள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன. பொம்மைகள் மழை, வெயில் காரணமாக வண்ணங்களை இழந்து பொலிவின்றி காட்சி அளிக்கின்றன.

சீரமைக்க வேண்டும்

அதுமட்டுமின்றி பொம்மைகள் சேதமடைந்த காரணத்தினால் பெரிய கோவில் மேம்பாலம், ராஜராஜ சோழன் சிலை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட பிரமாண்ட பொம்மைகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், மற்ற பகுதிகளில் உள்ள பொம்மைகளும் சாய்ந்த நிலையும், மண் படிந்து சுத்தமின்றியும் பொலிவிழந்து நிற்கிறது.எனவே, தஞ்சைக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட தலையாட்டி பொம்மைகளை சீரமைத்து புதிதாக வண்ணம் தீட்டி பொம்மைகள் புதுப்பொலிவு பெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story