பா.ஜனதா நிர்வாகி வீடு எனநினைத்து பெட்ரோல் குண்டு வீச்சு


பா.ஜனதா நிர்வாகி வீடு எனநினைத்து பெட்ரோல் குண்டு வீச்சு
x
திருப்பூர்


திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே பா.ஜனதா நிர்வாகி வீடு என நினைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து பா.ஜ.க.வினர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பா.ஜனதா உள்பட சில இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் அலுவலகங்கள், வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவதாக தகவல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பு திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே பா.ஜனதா முன்னாள் நிர்வாகி வாடகைக்கு குடியிருந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக பரவிய தகவலால் திருப்பூர் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த ஏ.வி.பி. லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் காங்கயம் பகுதியில் பஞ்சாலை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா. கோவை கோட்ட பொறுப்பாளர் பாலு என்பவர் வாடகைக்கு குடியிருந்துள்ளார். பின்னர் அவர் சொந்த வீடு கட்டி அங்கு சென்று விட்டார். இதன் பின்னர் வீட்டின் உரிமையாளர் லட்சுமணன் அந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை லட்சுமணன் தூங்கி எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தபோது, வீட்டின் முன்புற வளாகத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றது தெரிய வந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் அடிப்பகுதியில் பாட்டில் உடைந்து கிடந்ததுடன், பெட்ரோல் தரையில் கொட்டிக் கிடந்தது. ஆனால் எந்த சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில் அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம், உளவுத்துறை, நுண்ணறிவு பிரிவு, எஸ்.ஐ.சி., எஸ்.ஐ.யு., கியூ பிரிவு போலீசார் உள்பட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் குற்றப்பிரிவு போலீசாரும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாக இருந்த காட்சிகளை பார்வையிட்டனர்.

பரபரப்பு

இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக தகவல் வைரலாக பரவியதை தொடர்ந்து பா.ஜ.க. திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் ஏராளமான பா.ஜனதாவினர் சம்பந்தப்பட்ட வீட்டின் முன்பு திரண்டனர். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜனதா முன்னாள் நிர்வாகி பாலு அந்த வீட்டில் குடியிருந்ததால், தற்போதும் அவர் அதே வீட்டில் இருப்பதாக நினைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது லட்சுமணனுக்கு தொடர்புடைய நபர்கள் தொழில் போட்டி காரணமாக வீசினார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story