ராமநாதபுரம் மாவட்டத்தில் கேன், பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை


ராமநாதபுரம் மாவட்டத்தில் கேன், பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை
x

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல் வழங்க போலீஸ் அதிரடியாக தடைவிதித்துள்ளது.

ராமநாதபுரம்


பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் பெட்ரோல் வழங்க போலீஸ் அதிரடியாக தடைவிதித்துள்ளது.

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்

தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்பட பல மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தன. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும் வகையில் யாராவது வாகனங்களில் செல்கிறார்களா, பெட்ரோல் குண்டு உள்ளிட்டவைகளை எடுத்து செல்கின்றனரா என்று சோதனை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் வாகனங்களின் பதிவு எண்களை மாற்றி செல்வதாக வந்த தகவலை தொடர்ந்து வாகன எண்ணை சரிபார்த்து போலீசார் அனுப்பி வருகின்றனர்.

பாட்டிலில் வழங்க தடை

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து அமைப்புகளின் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

அதன்படி கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேன்களில் பெட்ரோல் வாங்க வரும் நபர்களின் விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள பல பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேனில் பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்காக வாகனங்கள் பழுதாகி நிற்கிறது என்று தெரிவித்தாலும் போலீசாரிடம் கூறி அனுமதி பெற்று வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story