தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு


தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

மண்டைக்காடு அருகே நள்ளிரவில் பா.ஜ.க. பிரமுகர் வீடு என நினைத்து தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மோட்டார் சைக்கிளில் வந்து வீசி விட்டு மர்மநபர்கள் 2 பேர் தப்பினர்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு அருகே நள்ளிரவில் பா.ஜ.க. பிரமுகர் வீடு என நினைத்து தொழிலதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மோட்டார் சைக்கிளில் வந்து வீசி விட்டு மர்மநபர்கள் 2 பேர் தப்பினர்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

என்.ஐ.ஏ. சோதனை

நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் என 90-க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் கடந்த 22-ந் தேதி சோதனை நடத்தினர்.

இந்த சோதனைக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வீடுகளை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது.

அதாவது கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. அலுவலகங்கள் மற்றும் பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் வீடுகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பெட்ரோல் குண்டுகள் வீச்சு

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள கருமன் கூடல் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கல்யாணசுந்தரம் (வயது 55) என்பவருடைய வீட்டில் 2 மர்மநபர்களால் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சிகள் கல்யாணசுந்தரம் வீட்டில் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. அதனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

கேமராவில் பதிவான காட்சிகள்

அதில், நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் ஹெல்மெட் அணிந்தபடி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் அதிலிருந்து இறங்கி கல்யாணசுந்தரம் வீட்டை நெருங்குகிறார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் சற்று தொலைவில் நிற்கிறார். கேட் அருகே வந்த நபர் அங்குமிங்கும் சுற்றி பார்த்து விட்டு மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை எடுத்து பற்ற வைத்து விட்டு வீட்டின் உள்ளே அடுத்தடுத்து 2 குண்டுகளை எறிகிறார்.

பின்னர் சைகை மூலம் ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த நபரை அழைத்து அதில் ஏறி தப்பி செல்கிறார். இவ்வாறாக பெட்ரோல் குண்டுகள் வீசி விட்டு மர்ம நபர்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் ஓடுகிறது. இந்த குண்டுகள் வீட்டு வளாகத்தில் விழுந்து குபீரென தீப்பிடித்து எரியும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.

இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் சேதமடைந்தது. ஜன்னலை மறைக்க தொங்க விடப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் கருகின. மேலும் காரின் முன்பகுதியில் தீ பட்டதில் லேசாக கருகியும் இருந்தன.

போலீஸ் விசாரணை

நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் கல்யாணசுந்தரத்துக்கு தெரியவில்லை. காலையில் 6 மணிக்கு எழுந்து பார்த்த போது தான் அவருக்கு இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி மண்டைக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கூடுதல் துணை சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை சூப்பிரண்டு தங்கராமன், மணவாளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பா.ஜ.க. பிரமுகர் வீடு என நினைத்து...

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் கைரேகை ஏதேனும் சிக்குகிறதா? என ஆய்வு நடந்தது.

தொழிலதிபர் கல்யாணசுந்தரம் தற்போது எந்த கட்சியிலும் இல்லை என கூறப்படுகிறது. அதே சமயத்தில் அவர் வசிக்கும் பகுதியில் பா.ஜ.க. பிரமுகரின் வீடு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story