லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி


லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி
x

லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தான். இதனை கண்டித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

பிளஸ்-2 மாணவர்

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம். இவருடைய மகன் பாலாஜி (வயது 18). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பாலாஜி, பள்ளி நேரம் போகவும், விடுமுறை நாட்களிலும் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு பாலாஜி, வழக்கம்போல் உணவு டெலிவரி செய்துவிட்டு வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் முகலிவாக்கம் அருகே சென்றபோது பின்னால் வந்த சிமெண்டு கலவை எந்திர லாரி இவரது மொபட் மீது மோதியது.

லாரி சக்கரத்தில் சிக்கி பலி

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த பாலாஜி மீது சிமெண்டு கலவை எந்திர லாரி ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய மாணவர் பாலாஜி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாலாஜியின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான பாலாஜி உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான சிமெண்டு கலவை எந்திர லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story