கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் போலீசார் கொடி அணிவகுப்பு


தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

கொடி அணிவகுப்பு

பொதுமக்கள் அச்சமின்றி பணியாற்றவும், மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.

அதன்படி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் நடந்த கொடி அணிவகுப்பை கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட போலீசார் பெங்களூரு சாலை வழியாக தாலுகா அலுவலகம் வரை சென்று பின்னர் மீண்டும் புதிய பஸ் நிலையத்தை வந்தடைந்தனர்.

இதில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசந்தர், நவுசாத், பார்த்திபன், அமர்நாத், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சீதாராமன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி கூறியதாவது:-

அச்சமடைய தேவையில்லை

பொதுமக்கள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் என்பதற்காக போலீஸ் கொடி அணி வகுப்பு நடத்தப்படுகிறது. மாவட்டம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல், நமது மாவட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகவும் போலீசார் இரவு, பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. எந்த பிரச்சினையாக இருந்தாலும் காவல் துறையிடம் உடனே புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை உட்கோட்ட காவல்துறை சார்பில், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் தேன்கனிக்கோட்டையில் சமூக நல்லிணக்க கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நேரு தெரு, கோட்டை வாசல், யாரப் தர்கா, காந்தி தெரு வழியாக சென்று, மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, குமரன் மற்றும் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி போலீஸ் நிலையங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story