கரூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை


கரூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
x

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக கரூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர்

வாகன சோதனை

தமிழகத்தில் ஆங்காங்கே பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி, இந்து அமைப்பினர் நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்கள் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் மாவட்டத்திலும் நேற்று மதியத்திற்கு மேல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் தற்காலிகமாக சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒருபகுதியாக கரூர் நகருக்குள் வரும் வாகனங்களை தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனையிட்டு அனுப்புகின்றனர். மேலும் வாகனங்களின் பதிவு எண், டிரைவரின் செல்போன் எண், எங்கிருந்து எங்கு செல்கிறது என்ற விபரங்களை போலீசார் குறித்து வருகின்றனர். இதேபோல் கரூரில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

சோதனை

இதேபோல நொய்யல், புன்னம்சத்திரம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் வேலாயுதம்பாளையம், காகிதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொண்ட குழுவினர் ஆங்காங்கே இரு சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நிறுத்தி முழுமையாக சோதனையிட்டு அனுப்பினர்.

இதேபோல கரூர் மாவட்டம் முழுவதும் போலீசாரின் இரவு ரோந்து பணியும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story