பரந்தூரில் விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்


பரந்தூரில் விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு: வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவர்கள் போராட்டம்
x

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பள்ளிக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பரந்தூர், வளத்தூர், தண்டலம், பொடவூர், நெல்வாய், நாகப்பட்டு, மடப்புரம், ஏகனாபுரம், எடையார்பாக்கம், சிங்கிலிபாடி, அக்கம்மாபுரம், மகாதேவி மங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களை உள்ளடக்கி சென்னையின் 2-வது மிகப்பெரிய பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பினை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து 59-வது நாளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, மத்திய, மாநில, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் நாகப்பட்டு, நெல்வாய், ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் பயிலும், தங்களின் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளை கிராம மக்கள் பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்தனர்.

இதையடுத்து, பள்ளிக்கூடங்களுக்கு செல்லாத குழந்தைகள் ஊர் பகுதியில் கூடி நின்று தங்களின் கிராமங்களை அழித்து விமான நிலையம் கொண்டு வர வேண்டாம் கேட்டு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். காலாண்டு தேர்வு நடைபெறும் நிலையில் பள்ளிக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story