ராஜபாளையம் நகரசபை கூட்டம்


ராஜபாளையம் நகரசபை கூட்டம்
x

ராஜபாளையம் நகரசபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகரசபையின் அவசர கூட்டம் தலைவர் பவித்ரா ஷ்யாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத்தலைவர் கல்பனா குழந்தைவேல் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 43 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கேள்வி நேரத்தின் போது பேசிய 21-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஞானவேல், கடந்த 2007-ம் ஆண்டு நகராட்சியில் டிரைவராக வேலைக்கு சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் பணி நிரந்தரம் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக நான் புகார் தெரிவித்தேன். இந்த நிலையில் டி.பி.மில் சாலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்து வந்து கொண்டிருந்தபோது பாலசுப்பிரமணியம் என்னை வாகனம் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தார். இதுகுறித்து நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி தலைவரிடம் மனு அளித்து 2 மாதங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறினார்.

இதற்கு பதிலளித்த தலைவர் புகாருக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் காங்கிரஸ் கவுன்சிலர் சங்கர் கணேஷ் கேட்ட கேள்விக்கு மற்றொரு காங்கிரஸ் கவுன்சிலர் ஜான் கென்னடி பதிலளித்தார். கேள்விக்கு தலைவர் அல்லது அதிகாரி பதிலளிக்க வேண்டும். அதை விடுத்து கவுன்சிலர் ஏன் பதில் சொல்கிறீர்கள் என கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கேள்வி கேட்ட காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக அ.தி.மு.க. உள்ளிட்ட சில கவுன்சிலர்களும் இணைந்து பேசியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story