மரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்ட விளம்பர பதாகை அகற்றம்


மரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்ட விளம்பர பதாகை அகற்றம்
x

மரங்களில் ஆணி அடித்து வைக்கப்பட்ட விளம்பர பதாகை அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை

கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கையும் தொடங்கியுள்ளதால் தனியார் பள்ளி, கல்லூரி, தனிப்பயிற்சி மையங்கள் நகரங்கள், கிராமங்கள் என விளம்பரங்கள் செய்து வருவதுடன் ஆங்காங்கே தங்கள் நிறுவன விளம்பர பதாகைகளையும் வைத்து வருகின்றனர். பல நிறுவனங்கள் சாலை ஓரங்களில் நிற்கும் மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகளை தொங்கவிட்டு வருகின்றனர். இதனால் சாலையோர மரங்களில் நூற்றுக்கணக்கான ஆணிகள் அடிக்கப்பட்டு ஏராளமான மரங்கள் பட்டு சாய்ந்துள்ளது. கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் அறந்தாங்கி மற்றும் பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, பேராவூரணி உள்பட பல பகுதிகளை சேர்ந்த கல்வி நிறுவனங்களின் பதாகைகள் மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கீரமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நட்ட நாவல் மரம், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியின் நினைவாக நடப்பட்ட அத்திமரம் உள்பட வேம்பு, புன்னை என ஏராளமான மரங்களில் கல்வி நிறுவனம் விளம்பர பதாகைகளை ஆணி அடித்து தொங்கவிட்டுள்ளனர். இதைப் பார்த்த கீரமங்கலம் பகுதி இளைஞர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு மரங்களில் ஆணி அடித்து தொங்கவிடப்பட்ட பதாகைகளையும், ஆணிகளையும் உடனே அகற்றவில்லை என்றால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இளைஞர்களின் கோரிக்கையையடுத்து விரைந்து வந்த கல்வி நிறுவன ஊழியர்கள் தாங்கள் மரங்களில் ஆணி அடித்து வைத்திருந்த பதாகைகளை தாங்களே அகற்றி ஆணிகளையும் பிடிங்கி எடுத்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் சாலை ஓர மரங்களில் இப்படி ஆணி, கம்பிகள் வைத்து பதாகை வைப்பதால் பல நூறு மரங்கள் பட்டுப்போனது.

இனிமேல் யாரும் மரங்களில் ஆணி அடித்து மரங்களை கொல்லாதீர்கள் என்று கோரிக்கை வைத்தனர். கல்வி நிறுவன ஊழியர்கள் கீரமங்கலம் பகுதி மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றிவிட்டு இனிமேல் மரங்களில் ஆணி அடிக்கமாட்டோம் என்று கூறிச் சென்றனர்.


Next Story