ஊட்டி- மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் சேவல் கொண்டை மலர்கள்


ஊட்டி- மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் சேவல் கொண்டை மலர்கள்
x
தினத்தந்தி 25 Sep 2022 7:00 PM GMT (Updated: 25 Sep 2022 7:00 PM GMT)

ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் சேவல் கொண்டை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் சேவல் கொண்டை மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

சேவல் கொண்டை மலா்கள்

சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கவும், மகிழ்விக்கவும் பூங்காக்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அலங்காரங்களும் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் இயற்கை அழகை காணவே விருப்பப்படுகின்றனர்.

இதனால் நீலகிாி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர் மற்றும் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த மலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு இடையே பூத்துக்குலுங்கும் பல வண்ண மலா்களை பார்த்து மகிழ்கின்றனர். இதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டி வரும் வழியில், மலைகளின் இரண்டு புறமும் பச்சை பசேல் என்றிருக்கும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் உள்ள 'ஸ்பேத்தோடியா' என அழைக்கப்படும் சேவல் கொண்டை மலர்கள் சீசன் தற்போது களை கட்டி உள்ளது.

இதனால் சாலையில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு இது விருந்தாக அமைந்துள்ளது.

2-வது சீசன்

இந்த மலா்களை கொண்ட மரம் ஆண்டுதோறும் முதல் சீசனாக ஆகஸ்டு முதல் அக்டோபா் வரையிலும் 2-வது சீசனாக டிசம்பா் முதல் பிப்ரவாி வரையிலும் பூத்துக்குலுங்கும். சிவப்பு நிறத்தில் கொத்து கொத்தாய் மலா்ந்துள்ள இந்த மலா்களால் குன்னூர் மலைப்பாதை சிவப்பு கம்பளம் விாித்தது போன்று காட்சியளிக்கிறது.

ஐரோப்பிய கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இவ்வகை பூக்கள் ஆங்கிலேயர் காலத்தில், குன்னூரில் அதிகளவில் நடவு செய்யப்பட்டது.

கொன்றை மலர்கள்

இதற்கிடையே பசுமை போர்த்திய வன பகுதியில் சிவப்பு வண்ண சேவல் கொண்டை மலர்களுக்கு மத்தியில் மஞ்சள் நிற கொன்றை மலர்களும் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலர்கள் ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை பூக்கின்றன. இந்த மலர்களை, சித்திரை 1-ந் தேதி விஷு பண்டிகையின்போது நடக்கும் பூஜையில், வைத்து வழிப்படுவது கேரள மக்களின் பாரம்பரியம். பெல்டோபோர்ம் பிட்ரோகார்பம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த வகை பூக்கள், குன்னூர் பகுதியில் அதிக அளவில் உள்ளன.

நீலகிரியில் தற்போது இரண்டாம் சீசன் நடைபெற்று வரும் நிலையில் சேவல் கொண்டை மலர்கள் மற்றும் கொன்றை மலர்கள் சாலை ஓரத்தில் பூத்து குலுங்குவது, சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.


Next Story