ரூ.1000 உரிமைத் தொகை: மீம் வீடியோவால் சவுக்கு சங்கர் - பிடிஆர் டுவிட்டரில் மோதல்!


ரூ.1000 உரிமைத் தொகை: மீம் வீடியோவால் சவுக்கு சங்கர் - பிடிஆர் டுவிட்டரில் மோதல்!
x
தினத்தந்தி 22 March 2023 10:09 AM GMT (Updated: 22 March 2023 10:54 AM GMT)

சவுக்கு சங்கரின் அட்மின் பிரதீப் இரவு 11.30 மணி அளவில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை

கடந்த திங்கள் கிழமை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இது பல்வேறு தரப்பில் வரவேற்புகளை பெற்றது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற இந்த வாக்குறுதி பெண்கள் உட்பட பல்வேறு தரப்பினரை மகிழ்ச்சியடைய செய்து இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் தகுதிவாய்ந்த குடும்பத்தலைவிகள் யார் எனவிமர்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் சவுக்கு சங்கரின் அட்மின் வாய்ஸ் ஆப் சவுக்கு என்ற டுவிட்டர் பக்கத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடியை வைத்து வீடியோ மீம் ஒன்று வெளியானது செந்தில், கவுண்டமணி நகைச்சுவை வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பிடிஆரை விமர்சிக்கும் வகையில் மீம் பகிரப்பட்டது.

இந்த மீம் உடனே மிகப்பெரிய அளவில் வைரலானதோடு, அதிகளவில் ரீ-டுவிட்டும் செய்யப்பட்டது. இதனையடுத்து சவுக்கு சங்கரின் அட்மின் பிரதீப் இரவு 11.30 மணி அளவில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து டுவீட் செய்துள்ள சவுக்கு சங்கர், பிடிஆர் அழுத்தம் காரணமாக தமிழக போலீஸ் எனது அட்மினை கைது செய்துள்ளனர். தன்னை யாரும் விமர்சிக்க கூடாது என அவர் நினைக்கிறாரா என எழுதி பிடிஆரை டேக் செய்திருந்தார்.

இதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ள உள்ள பிடிஆர், "இந்த கற்பனைவாதியின் குழப்பங்களை நான் புறக்கணித்துவிட்டேன். இது 100% பைத்தியக்காரத்தனமான கருத்து என்பதால் இது பற்றி விளக்கம் கொடுக்கிறேன். அந்த ட்விட்டர் கணக்கு பற்றி எனக்கு தெரியாது. நான் அந்த வீடியோவை பார்க்கவும் இல்லை புகாரளிக்கவும் இல்லை.

இடைநீக்கம் செய்யப்பட்ட டி.வி.ஏ.சி எழுத்தாளரால் (சவுக்கு சங்கரை குறிப்பிடுகிறார்) சுமத்தப்படும் மாநில அரசின் பட்ஜெட் மீதான விமர்சனங்கள் என்னை ஒருவேளை அசைத்து பார்த்தது என்றால், நான் அரசியல் வாழ்க்கையை விட்டே விலகிவிடுவேன்." என்று கூறி உள்ளார்.



Next Story