ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு


ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 31 May 2023 10:45 PM GMT (Updated: 31 May 2023 10:45 PM GMT)

காட்டு யானைகள் புகுவதை அறிவதற்காக கண்காணிப்பு கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

நீலகிரி

கூடலூர்

காட்டு யானைகள் புகுவதை அறிவதற்காக கண்காணிப்பு கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

கண்காணிப்பு கோபுரங்கள்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து வருகின்றன. அவை தாக்கி பலர் உயிரிழந்தனர். தொடர்ந்து யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பின்னர் பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை வருவாய்த்துறை, வனத்துறையினர் இணைந்து கண்டறிந்தனர். பின்னர் லாரஸ்டன் நெம்பர் 4, காந்திநகர் உள்பட 5 இடங்களில் இரவு, பகலாக வேட்டை தடுப்பு காவலர்கள் அமர்ந்து கண்காணிக்கும் வகையில் கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

இந்தநிலையில் கூடலூர்-ஓவேலி பேரூராட்சி எல்லையான லாரஸ்டன் நெம்பர் 4 கிராமத்தில் உள்ள வட்டப்பாறை என்ற இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதை அறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் பேரூராட்சி துணைத் தலைவர் சகாதேவன் தலைமையிலான கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் கோபுரம் அமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. பல கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கலந்து பேசி முடிவு தெரிவிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இதைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா தலைமையில் தாசில்தார் சித்ராஜ், வனச்சரகர்கள் யுவராஜ், ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விளைநிலத்தில் எக்காரணத்தை கொண்டும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படாது. மேலும் பொதுமக்களின் அன்றாட பணிகளுக்கும், போக்குவரத்துக்கும் எந்த வித இடையூறும் இருக்காது என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story