சேலம் மாநகராட்சி கூட்டத்தில்தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்


சேலம் மாநகராட்சி கூட்டத்தில்தி.மு.க.- அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
x

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சேலம்

சேலம்,

மக்கள் பிரச்சினை

சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. இதற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர்சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் இமயவர்மன், ஒரு யூ-டியூப் சேனலில், மேயரை கொச்சைப்படுத்தி வீடியோ வௌியிட்டு உள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறினார்.

அப்போது மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் ஜெயக்குமார் எழுந்து தாறுமாறாக குறுஞ்செய்தி பதிவிடும் கவுன்சிலர் இமயவர்மன் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம். கூட்டணியில் இருந்து கொண்டு தி.மு.க. பற்றி குறை எப்படி செல்லலாம் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி எழுந்து இமயவர்மனிடம், கூட்டத்தில் மக்கள் பிரச்சினை மட்டும் பேசுங்கள் என்று கூறினார்.

பேட்டரி வாகனங்கள்

பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர் வரதராஜ், 60-வது வார்டு பகுதியில் பணிகள் நடைபெறவில்லை என்று கூறினார். அதற்கு கொண்டலாம்பட்டி மண்டல தலைவர் அசோகன், கவுன்சிலர் பொய் சொல்லக்கூடாது. 60-வது வார்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

அஸ்தம்பட்டி மண்டல தலைவர் உமாராணி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பல குளறுபடியால், வீடு, வீடாக சென்று குப்பை சேகரிப்பதற்காக வாங்கப்பட்ட 225 பேட்டரி வாகனங்கள் பழுதாகி பயன்படாமல் உள்ளன. தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு புதிதாக 216 வாகனங்கள் வாங்கப்பட்டு தற்போது வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்படுகிறது என்றார்.

கடும் வாக்குவாதம்

தொடர்ந்து மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி, அ.தி.மு.க. ஆட்சியில் பேட்டரி வாகனங்கள் வாங்கிய போது மேயர், கவுன்சிலர்கள் இல்லை. மாநகராட்சி அதிகாரிகள் தான் இருந்தனர். அரசு திட்டத்திற்கு நிதி ஒதுக்கும். அதை அதிகாரிகள் தான் செயல்படுத்தினார்கள். எனவே அ.தி.மு.க. ஆட்சி மீது குற்றம் கூறக்கூடாது என்று தெரிவித்தார்.

இதற்கு பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி உள்ளிட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் பலர் அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல திட்டங்களில் குளறுபடிகள் உள்ளன என்று கூறினர். இதனால் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வெளிநடப்பு

இதையடுத்து மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி உள்ளிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள், மன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியை குறை கூறுவதற்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி இருக்கையை விட்டு எழுந்து கூட்ட அரங்கின் மைய பகுதிக்கு வந்தனர்.

அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் ஒரு மணி நேரம் கூட்ட மன்றத்தில் உட்கார்ந்து பேசி விட்டு, தற்போது வெளிநடப்பு செய்கின்றோம் என்று கூறுவது சரியா? பேச்சு உரிமை கொடுப்பது தி.மு.க. ஆட்சியாகும். எனவே வெளிநடப்பு வேண்டாம் என்று கூறினர். இதையடுத்து வெளிநடப்பு செய்வதை அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கைவிட்டனர்.

மீண்டும் வாக்குவாதம்

பின்னர் தி.மு.க. கவுன்சிலர் ஈசன் இளங்கோ, பேச தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேச முயன்றனர். இதையடுத்து ஈசன் இளங்கோ நான் பேசும் போது ஏன்? குறுக்கீடு செய்கிறீர்கள் என்று கூறினார். அப்போது தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே 2-வது முறையாக வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் பேசும் போது மத்திய அரசு பணிக்கு தமிழ்நாட்டில் இருந்து 2 சதவீதம் பேர் மட்டுமே செல்கின்றனர்.

எனவே மத்திய அரசு பணிக்கு அதிகம் பேர் செல்லும் வகையில் மாநகராட்சி சார்பில் இலவச பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு மேயர் ராமச்சந்திரன், கவுன்சிலரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார். பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.


Next Story