அரசு பள்ளியில் பொதுத்தேர்வுக்கு கட்டணமாக, மாணவர்களிடம் ரூ.150 வசூல்


அரசு பள்ளியில் பொதுத்தேர்வுக்கு கட்டணமாக, மாணவர்களிடம் ரூ.150 வசூல்
x

திருப்பூர் கே.வி.ஆர்.நகர் அரசு பள்ளியில் பொதுத்தேர்வுக்கு கட்டணமாக, மாணவர்களிடம் ரூ.150 வசூலிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

திருப்பூர்

திருப்பூர் கே.வி.ஆர்.நகர் அரசு பள்ளியில் பொதுத்தேர்வுக்கு கட்டணமாக, மாணவர்களிடம் ரூ.150 வசூலிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பு

அரசுப்பள்ளி, மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் ஒரு சிலரின் சுயநல நோக்கத்தால் அரசுப்பள்ளி மீதான செயல்பாடுகள் தவறாக சமூகத்தில் சித்தரிக்கப்படுகிறது. திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர்களின் அறியாமையை பள்ளி நிர்வாகம் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அருகில் உள்ள கருவம்பாளையம் பள்ளிக்கு மாணவர்கள் சென்று தேர்வு எழுத உள்ளனர். வாகனங்கள் உள்ளிட்ட எந்தவித ஏற்பாடுகளும் இன்றி, எதற்காக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.

பெற்றோர் தயக்கம்

அதேபோல் இப்பள்ளியில் ஆங்கிலவழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, அரசின் எவ்வித வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் ஆணையும் இன்றி கட்டணமாக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.200 வசூலிக்கப்பட்டது. ஆனால் இது போன்ற விஷயங்களை மாணவர்கள் சொன்னால், அவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்பதால், பெற்றோர்களும் வெளியே சொல்ல தயங்குகின்றனர்.

ஒரே வளாகத்தில் உள்ள தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு போதிய கழிவறை வசதி இல்லை. அவ்வப்போது மாநகராட்சி தண்ணீர் வராத நாட்களில் பெரும் சிரமம் ஏற்பட்டு விடும்.

எதிரில் உள்ள கட்டண கழிவறையை பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் மாணவர்களுக்கு ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் முழுமையாகக் கூட பேச முடிவதில்லை. அரசுப்பள்ளியில் பொதுத்தேர்வுக்கு எதற்காக கட்டணம் வசூலிக்க வேண்டும். இது தவறான முன்னுதாரணம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மாணவர்களிடம் பணம் வசூல் செய்வது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Related Tags :
Next Story