கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை


கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி


தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனம் கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி ரகங்களை இந்திய முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக அனைவரும் பயன்பெறும் வகையில் விற்பனை செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்களித்து வருகிறது.

கோ-ஆப்டெக்சில் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டியை முன்னிட்டு சிறப்புவிற்பனை நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு சேலைகள், காஞ்சீபுரம், ஆரணி மற்றும் திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால்மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக உள்ளது. இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி 2022 பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி விற்பனை நிலையத்திற்கு ரூ.50 லட்சம் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவு திட்டத்தின்படி மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.5000 வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12-வது மாதத் தவணையில் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டுரக துணிகளை வாங்கி பயன்பெறலாம். தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு. எனவே அனைத்து துறை அரசு பணியாளர்களும், பொதுமக்களும் கைத்தறி நெசவாளர்களுக்கு கை கொடுத்து உதவிட கோ-ஆப்டெக்சில் 30 சதவீத தீபாவளி சிறப்பு விற்பனையில் துணிகள் வாங்கி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story