விடுதியுடன் சிறப்பு பள்ளி சேர்க்கை முகாம்


விடுதியுடன் சிறப்பு பள்ளி சேர்க்கை முகாம்
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விடுதியுடன் கூடிய சிறப்பு பள்ளி சேர்க்கை சிறப்பு முகாம் நாளை நடப்பதாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்


மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விடுதியுடன் கூடிய சிறப்பு பள்ளி சேர்க்கை சிறப்பு முகாம் நாளை நடப்பதாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு கல்வி

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இருபாலருக்குமான விடுதியுடன் கூடிய 14 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி கூத்தாநல்லூரில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சேரும் மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுக்கான இலவச விடுதி, சத்தான உணவு, சிறப்பு கல்வி ஆகியவை வழங்கப்படுகிறது.

திருத்துறைப்பூண்டி மணலியில் விடுதியின்றி தினசரி வந்து செல்லும் வகையில்14 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. திருத்துறைப்பூண்டி நகர பகுதியில் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தொடக்க கால பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

வேளாங்கண்ணியில்....

திருவாரூர் நகராட்சியில் முதலியார் தெரு, பாவா கோபால்சாமி நகராட்சி தொடக்கப்பள்ளியில் காது கேளாத, வாய்பேச இயலாத, இளம் சிறார்களுக்கு 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப கால பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையம் மூலம் காது கேளாத வாய்பேச இயலாத குழந்தைகளுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச காக்ளியர் அறுவை சிகிச்சைக்கு எற்பாடு செய்து பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் செவித்திறன் குறைவுடையோருக்கான மற்றும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை விடுதியுடன் கூடிய சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது.

கலெக்டர் அலுவலகம்

எனவே மேற்கானும் ஆரம்ப கால மையங்கள் அல்லது சிறப்பு பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்பு பெற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல் பாஸ்போர்ட் சைஸ்போட்டோ 2, ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story