'தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை' பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல்


தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை  பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வலியுறுத்தல்
x

திண்டுக்கல்லில், பா.ஜ.க. நிர்வாகியின் கார்-7 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல்

தீ வைத்து எரிக்கும் சம்பவங்கள்

பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தார். அதைத்தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மாநகர பா.ஜ.க. தலைவர் பால்ராஜின் கார், 7 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்ட இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை, சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு இடங்களில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளை குறிவைத்து அவர்களது வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசுவது, வாகனங்களை தீ வைத்து எரிப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் பா.ஜ.க. மாநகர தலைவரின் கார், 7 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது ஒரு பயங்கரவாத சூழல் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.

இதனை தடுக்க போலீசாரும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் அதனை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே இந்த நேரத்தில் தமிழக அரசையோ, போலீசாரையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. போலீசார் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கடும் நடவடிக்கை

அவர்களுக்கு பா.ஜ.க. முழு ஒத்துழைப்பு கொடுக்கும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டின் காவலர்கள். அவர்களை தானே தாக்குகின்றனர் என்று பிற கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கக்கூடாது. என்.ஐ.ஏ. அமைப்பை வலுப்படுத்த நடந்த ஓட்டெடுப்பில் முதலில் வாக்களித்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தான். அப்படி இருக்க தற்போது ஏன் அவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்பதை அவர் தான் விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காடேஸ்வரா சுப்பிரமணி

இதேபோல் திண்டுக்கல்லுக்கு வந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அரங்கேறி வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் பயங்கர கலவரம் ஏற்படும். எனவே அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்.

போலீசாரும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகின்றனர். இது தமிழக அரசுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆ.ராசா பேசியதை கண்டித்து பா.ஜ.க. மாநகர தலைவர் கோவையில் மேடையில் பேசியதற்காக அதிகாலையில் கைது செய்யப்படுகிறார். பெரியாரை பேசிய கனல் கண்ணன் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி தமிழகத்தில் இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடையவர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்யப்படாதது அரசின் மக்கள் விரோத போக்கையே காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story