கழிவுநீரில் இறங்கி மனிதர்கள் உயிரிழப்பது தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது


கழிவுநீரில் இறங்கி மனிதர்கள் உயிரிழப்பது தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது
x

இந்திய அளவில் கழிவுநீரில் இறங்கி மனிதர்கள் உயிரிழப்பது தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது என்று தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் வேதனையுடன் தெரிவித்தார்.

வேலூர்

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்படும் மறுவாழ்வு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களிடம் முறையாக ஊதியம் வழங்கப்படுகிறதா, வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்யப்படுகிறதா, என்றும் மருத்துவ மற்றும் நிதி உதவிகள் தொழிலாளர் மாநில காப்பீட்டு சட்ட சந்தா முறையாக செலுத்தப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.

மேலும் தூய்மை பணியாளர்களுக்கு கையுறை, காலுறை மற்றும் முககவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை சரியாக வழங்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்களை ஏற்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை ஒப்பந்தத்தில் இணைக்கும்படி அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தூய்மை பணியாளர் நலஆணையம்

அதைத்தொடர்ந்து தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய அளவில் தூய்மை பணியாளர் நலஆணையம் உள்ளது. அதேபோன்று மாநில அளவில் தூய்மை பணியாளர் நல ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். 11 மாநிலங்களில் மாநில தூய்மை பணியாளர் நல ஆணையம் உள்ளது. தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் நல வாரியம் உள்ளது. ஆனால் ஆணையம் இல்லை. தூய்மை பணியாளர் நல ஆணையம் அமைக்க வேண்டும் என்று தமிழக கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். விரைவில் முதல்-அமைச்சரிடம் மனு அளிக்க உள்ளோம். அதேபோன்று தூய்மை பணியாளர்களின் நலன்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் மாநில அளவில் தூய்மை பணியாளர்களுக்கு வளர்ச்சி நிதி ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

வேலூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக வருங்கால வைப்புநிதி பிடித்தம் செய்யப்பட்டு வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை ஆய்வு செய்யும்படி கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன்.

தமிழகம் முதலிடம்

இந்திய அளவில் கழிவு நீரில் இறங்கி மனிதர்கள் உயிரிழப்பது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 1993-ம் ஆண்டு முதல் தற்போது வரை 225 தூய்மை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மனிதர்கள் கழிவு நீரில் இறங்க கூடாது என்பதற்காக தற்போது ரூ.100 கோடி மதிப்பில் தூய்மை பணிக்காக எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை விரைவில் பயன்படுத்தப்படும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கழிவுநீரில் இறங்குவதால் தான் 90 சதவீதம் இறப்புகள் ஏற்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் தூய்மை பணியாளர்களை அவுட் சோர்சிங் மூலம் பணி அமர்த்தாமல் கர்நாடகா, ஆந்திரா போன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மூலம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். அப்போதுதான் தூய்மை பணியாளர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணையத்தலைவர் வெங்கடேசன் வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலம் கன்னிகாபுரத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கான குடியிருப்பை கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.


Next Story