பக்ரைனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த தஞ்சாவூர் வாலிபர் மாயம் - கடத்தப்பட்டாரா?


பக்ரைனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த தஞ்சாவூர் வாலிபர் மாயம் - கடத்தப்பட்டாரா?
x

பக்ரைனில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த தஞ்சை வாலிபர் மாயமானார். இதுபற்றி அவரது மனைவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவர் கடத்தப்பட்டாரா? என விசாரித்து வருகின்றனர்.

சென்னை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் மாதவன் (வயது 35). இவர், பக்ரைன் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி வைத்தீஸ்வரி (30). இவர், பட்டுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

பக்ரைனில் இருந்தபடி தனது மனைவி வைத்தீஸ்வரியிடம் செல்போனில் பேசிய மாதவன், "2 மாதங்கள் விடுமுறை கிடைத்திருக்கிறது. இந்த மாதம் 20-ந்தேதி பட்டுக்கோட்டையில் உள்ள வீட்டுக்கு வந்து விடுவேன். பக்ரைனில் இருந்து விமானத்தில் சென்னை வந்து, வாடகை காரில் வீட்டுக்கு வருகிறேன்" என கூறியிருந்ததாக தெரிகிறது.

இதனால் கடந்த 20-ந்தேதி வைத்தீஸ்வரி கணவரை எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் மதியம் வரையில் மாதவன் வரவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போன் 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் வருவார் என நினைத்தார்். ஆனால் அன்றும் வரவில்லை. அவரது செல்போன் தொடர்ந்து 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து வைத்தீஸ்வரி, கணவர் மாதவன் வேலை பார்த்த நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, அவர் ஏற்கனவே விடுமுறையில் சொந்த ஊர் செல்வதாக கூறிவிட்டு இந்தியா புறப்பட்டு சென்று விட்டதாக தகவல் கிடைத்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வைத்தீஸ்வரி, சென்னை விமான நிலையம் வந்து விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரித்தார். அவர்கள், இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கும்படி கூறினார்.

அதன்படி வைத்தீஸ்வரி சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்தார். போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள், மாதவனின் செல்போன் சிக்னல்கள் ஆகியவைகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதவன் விமானத்தில் சென்னை வந்துவிட்டு, பட்டுக்கோட்டை செல்லாமல் வேறு எங்காவது சென்று விட்டாரா? இல்லை மாதவனை மர்ம ஆசாமிகள் கடத்தி சென்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story