திருட்டுபோனதாக கூறப்பட்ட நகை-பணம் வீட்டிலேயே இருந்தது


திருட்டுபோனதாக கூறப்பட்ட நகை-பணம் வீட்டிலேயே இருந்தது
x

திருட்டுபோனதாக கூறப்பட்ட நகை-பணம் வீட்டிலேயே இருந்தது.

அரியலூர்

தா.பழூர்:

திருட்டு போனதாக...

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழமைக்கேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமையன் மகன் விமல்குமார். இவர் சிங்கப்பூரில் சமையல் வேலை செய்து வருகிறார். விமல்குமாரின் மனைவி பிரபா, தங்களது 2 பெண் குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியாருடன் கீழமைக்கேல்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விமல்குமாரின் இளைய மகள் கீழே விழுந்ததில், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து, அரியலூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பிரபா குடும்பத்துடன் தங்கி, குழந்தைக்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மைக்கேல்பட்டியில் உள்ள வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10½ பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் திருட்டு போனதாக பிரபா கொடுத்த தகவலின்பேரில் தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

தங்கச்சங்கிலி-பணம்

நேற்று முன்தினம் இரவு நேரம் ஆகிவிட்டதால் தொடர்ந்து விசாரணை செய்ய முடியாத நிலையில், நேற்று தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் அந்த வீட்டில் கலைந்து கிடந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது பீரோவில் இருந்து கலைத்து வீசப்பட்ட பொருட்களுக்கு இடையில், திருட்டு போனதாக கூறப்பட்ட 7½ பவுன் சங்கிலி மற்றும் பல்வேறு இடங்களில் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டிருந்த பணம் ஆகியவை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டன. திருட வந்த மர்ம நபர் நகை மற்றும் பணம் இருந்த இடம் தெரியாமல் அனைத்து பொருட்களையும் கலைத்து போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story