வாலிபரை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை-நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


வாலிபரை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை-நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x

வாலிபரை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

வாலிபரை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

குத்திக்கொலை

நெல்லை பேட்டை எம்.ஜி.பி. சன்னதி கல்கட்டு தெருவை சேர்ந்தவர் அப்துல்காதர் ஜெய்லானி (வயது 28). இவரது வீட்டுக்கு அருகே முகமது மைதீன் என்ற மைதீன் (42) என்பவர் வசித்து வந்தார். முகமது மைதீன் தொழிலாளியாக வேலைபார்த்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி இரவு 9.30 மணிக்கு அப்துல்காதர் ஜெய்லானி தனது வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது டி.வி.யை சத்தமாக வைத்து பார்த்ததாக கூறி முகமது மைதீன் ஆத்திரம் அடைந்தார். உடனே அவர் அப்துல்காதர் ஜெய்லானி வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். பின்னர் முகமது மைதீன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் அப்துல்காதர் ஜெய்லானியை குத்தினார்.

இதில் காயம் அடைந்த அப்துல்காதர் ஜெய்லானி பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 17-ந்தேதி இறந்தார்.

10 ஆண்டு சிறை

இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது மைதீனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் வழக்கை விசாரித்து முகமது மைதீனுக்கு, கொலை குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, கொலை செய்யும் நோக்கில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ஆபாசமாக திட்டியதற்கு 1 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் கருணாநிதி ஆஜர் ஆனார்.


Next Story