நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் - கனிமொழி எம்.பி. பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் - கனிமொழி எம்.பி. பேச்சு
x

மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கனிமொழி எம்.பி கூறினார்.

தேசிய மீனவர் தினத்தையொட்டி மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு சார்பில் மீனவர் மாநாடு குமரி மாவட்டம் கோடிமுனையில் நடைபெற்றது. இதற்கு கோடிமுனை ஊர் தலைவர் சார்லஸ் தலைமை தாங்கினார். முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆசியுரை வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மீனவ பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. மக்களை பிரித்து ஆள்வதற்கு சாதி, மதத்தின் பெயரால் பிரச்சினைகளை உருவாக்கி காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள். பிரிவினையால் பிரச்சினைகள் ஏற்படும்போது பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும் தான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மத்தியில் இருப்பவர்கள் நம்மை பிரித்தாளுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள். இந்த தகவலை உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். எந்த மதப்பிரிவினை இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இந்த விழாவை கொண்டாடுகிறோம். இது தொடர வேண்டும்.

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நானும் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன். மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நாட்டுப்படகுக்கு மானிய டீசல் 4 ஆயிரம் லிட்டரில் இருந்து 4,400 லிட்டர் ஆக உயர்த்தினார். விசைப்படகுக்கு மானிய டீசலை 18,000 லிட்டரில் இருந்து 19,000 லிட்டராகவும் உயர்த்தி உள்ளார். 7 ஆண்டுகள் ஆன பிறகு தான் காணாமல் போன மீனவர் இறந்ததாக கருதப்படும் என்பதை 2 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு உள்ளோம்.

கடந்த ஆட்சியில் மீனவர்கள் வீடு கட்டினால் பட்டா வழங்கப்படவில்லை. இப்போது மீனவர்களுக்கு உரிமையான இடங்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது. உங்களுக்கு பட்டா இல்லை என்றால் மனு கொடுங்கள். நாங்கள் பட்டா வாங்கி தருகிறோம். கடந்த 15 ஆண்டுகளாக பட்டா வழங்கவில்லை என்கிறீர்கள். நாங்கள் இப்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்.

மீனவர்களுக்கு என நலவாரியம், தனித்துறை அமைக்கப்பட்டது கலைஞர் ஆட்சியில் தான். நிச்சயமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது பழங்குடியினர் பட்டியலில் மீனவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story