சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு


சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிப்பு
x

கோப்பு படம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது. சன்னிதானம் நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது

திருவனந்தபுரம்,

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள்(17-ந்தேதி) காலை மண்டல பூஜை தொடங்கியது. முதல் நாளே பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலையில் குவிய தொடங்கினர். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கடந்த மூன்று நாட்களாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது.

சன்னிதானம் நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தினமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதுவரை 1,61,789 பேர் தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு அறிவித்தது. இந்நிலையில் வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிர்க்க சாமி தரிசனம் செய்யும் நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டதில் இருந்து மதியம் 1 மணி வரையிலும், பின்பு மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மொத்தம் 16 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story