மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர்; முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு


மகாளய அமாவாசையையொட்டி  பவானி கூடுதுறையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர்;  முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
x

மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள். அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.

ஈரோடு

பவானி

மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினார்கள். அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.

பவானி கூடுதுறை

தமிழகத்தில் உள்ள முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக பவானி கூடுதுறை உள்ளது. அங்கு காவிரி ஆறு, பவானி ஆறு, கண்களுக்கு புலப்படாத அமுத நதி ஆகிய 3 ஆறுகளும் சங்கமிக்கும் தலமாக விளங்குகிறது. பரிகார தலமாக இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பவானி கூடுதுறைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து புனித நீராடிவிட்டு சங்கமேஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

அமாவாசை தினங்களில் பவானி கூடுதுறைக்கு பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக தமிழ் மாதங்களில் தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் மகாளய அமாவாசையின்போது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பக்தர்கள் பவானி கூடுதுறைக்கு வருவது வழக்கம்.

திதி, தர்ப்பணம்

இந்தநிலையில் புரட்டாசி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபங்களில்புரோகிதர்கள் திதி, தர்ப்பணம் செய்வதற்காக தயாராக இருந்தனர். கூடுதுறைக்கு வந்த பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர். அப்போது தங்களது முன்னோர்களை நினைத்து திதி கொடுத்த பக்தர்கள் கூடுதுறையில் தண்ணீரில் இறங்கி பிண்டங்களை விட்டனர். பிறகு கூடுதுறையில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர். அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், கரூர், சேலம், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்திருந்தார்கள். இதனால் நேரம் செல்லசெல்ல பக்தர்களின் கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்தது. கூடுதுறையில் பரிகார மண்டபங்களில் பக்தர்களின் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்களின் தலைகளாகவே காணப்பட்டது.

பல லட்சம் பக்தர்கள்

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தி வந்தனர். கூடுதுறையில் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்றுவிடாமல் இருக்க பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு இருந்தது. ஆண்கள், பெண்கள் தனித்தனியாக புனிதநீராடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதேபோல் கோவில்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மிக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர். குறிப்பாக கோவிலில் இருந்து கூடுதுறைக்கு செல்லும் வரை பக்தர்களின் கூட்டநெரிசல் அதிகமாக காணப்பட்டது. பல லட்சம் பக்தர்கள் கூடுதுறையில் புனிதநீராடினார்கள். பக்தர்கள் புனிதநீராட உள்ளே செல்வதற்கும், புனிதநீராடிவிட்டு வெளியே வருவதற்கும் ஒருவரையொருவர் முந்தியடித்து சென்றதால் வயதானவர்கள், குழந்தைகளை வைத்திருந்தவர்கள் பெரும் சிரமப்பட்டார்கள்.

கட்டணம்

பவானி கூடுதுறைக்கு திதி கொடுக்க வந்த கோவை சிங்காநல்லூரை சேர்ந்த ரமணி (வயது 39) என்பவர் கூறியதாவது:-

எனது தாத்தா, தந்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுப்பதற்காக பவானி கூடுதுறைக்கு வந்தேன். மகாளய அமாவாசையன்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறந்த பலன் அளிக்கும் என்பதால் வந்து உள்ளேன். எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதேசமயம் புரோகிதர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதற்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை கட்டணம் கேட்கிறார்கள். இங்கு சாதாரண மக்கள் தான் அதிகமாக வந்து செல்கிறார்கள். எனவே கட்டணத்தை முறைப்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். புனிதநீராடும் பகுதியிலேயே பிண்டங்கள் கரைக்கப்படுகிறது. இலைகள், பாக்கு மட்டை தட்டுகள், துணிகள் ஆகியன ஆங்காங்கே கிடக்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதை அவ்வப்போது சுத்தம் செய்ய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story