நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி? - கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது


நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி? - கடைசி ஆட்டம் இன்று நடக்கிறது
x

தொடரை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது.

ஆமதாபாத்,

இந்தியாவில் விளையாடி வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் 0-3 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் மோசமான தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்திலும், லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் சறுக்கலை சந்தித்தால் சொந்த மண்ணில் இந்தியா 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தொடரை இழப்பதுடன் 20 ஓவர் போட்டித் தரவரிசையில் 'நம்பர் ஒன்' இடத்தையும் பறிகொடுக்கும். எனவே இந்திய அணி தொடரை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட எல்லா வகையிலும் முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையொட்டி இந்திய அணியின் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேற்று அளித்த பேட்டியில், '2021-ம் ஆண்டு இதே மைதானத்தில் தான் எனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினேன். இங்கு எனக்கு மறக்க முடியாத நினைவுகள் உண்டு. ஆனால் தற்போதைய நிலைமை முற்றிலும் வேறு. மீண்டும் இங்கு விளையாட இருப்பது எனக்கு உற்சாகம் அளிக்கிறது. அழகான ஸ்டேடியம், வியப்பூட்டும் ரசிகர்கள் கூட்டம் முன்பு விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்' என்றார்.

2012-ம் ஆண்டு இந்திய மண்ணில் 20 ஓவர் தொடரை வென்ற நியூசிலாந்து அணி அதன் பிறகு இங்கு எந்தவித போட்டி தொடரையும் கைப்பற்றியது கிடையாது. இதனால் தொடரை வென்று தங்களது நீண்ட கால ஏக்கத்தை தணிக்க நியூசிலாந்து அணி முயற்சி செய்யும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Next Story