ஜூனியர் தெற்காசிய கால்பந்து: இந்திய அணி 'சாம்பியன்'


ஜூனியர் தெற்காசிய கால்பந்து: இந்திய அணி சாம்பியன்
x

இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்தது.

கொழும்பு,

ஜூனியர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை துவம்சம் செய்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அத்துடன் லீக் ஆட்டத்தில் (1-3) நேபாளத்திடம் அடைந்த தோல்விக்கும் பதிலடி கொடுத்தது.

இந்திய அணி தரப்பில் பாபி சிங் (18-வது நிமிடம்), கோரு சிங் (30-வது நிமிடம்), கேப்டன் வன்லால்பெகா (63-வது நிமிடம்), மாற்று ஆட்டக்காரர் அமன் (90-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். முன்னதாக 38-வது நிமிடத்தில் நேபாள அணியின் கேப்டன் பிரசாந்த் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

முன்பு 16 மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நடத்தப்பட்டு வந்த இந்த போட்டி தற்போது 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story