ஹாக்கி உலக கோப்பை: அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்து காலிறுதிக்கு முன்னேறியது கொரியா...!


ஹாக்கி உலக கோப்பையின் மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி அணி பிரான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

புவனேஸ்வர்,

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடித்த ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் நேரடியாக கால்இறுதிக்குள் நுழைந்தன. ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகள் 2-வது சுற்றில் மோதுகின்றன.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் கொரியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தனர். ஆட்டத்தின் முதல் பாதில் அர்ஜெண்டினா 1 கோல் அடித்து முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது, 3வது, 4வது பாதி ஆட்டடத்தில் அர்ஜெண்டினா 2 கோல், 1 கோல், 1 கோலும், கொரியா அணி 2 கோல், 1 கோல், 2 கோலும் அடித்தன. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 5 கோல்கள் அடித்ததால் ஆட்டம் 5-5 என்ற கணக்கில் டிரா ஆனது.

இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் கொரியா அணி 3-2 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி கால் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கிறது.

இந்த ஆட்டத்திற்கு முன்னதாக நடைபெற்ற ஆட்டடத்தில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.


Next Story