புரோ ஆக்கி லீக்கில் இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்


புரோ ஆக்கி லீக்கில் இந்தியா-பெல்ஜியம் இன்று மோதல்
x

கோப்புப்படம்

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது.

லண்டன்,

9 அணிகள் இடையிலான 4-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இதில் புவனேஷ்வரில் நடந்த உள்ளூர் சுற்று முடிவில் இந்திய அணி 8 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 19 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய சுற்றில் லண்டனில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஒலிம்பிக் சாம்பியன் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

பெல்ஜியம் அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கிறது. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்க முனைப்பு காட்டும். அதேநேரத்தில் பெல்ஜியம் அணி புள்ளி பட்டியலில் ஏற்றம் காண முழு திறனையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

புதிய பயிற்சியாளர் கிரேக் புல்டான் வழிகாட்டுதலில் இந்திய அணி சந்திக்கும் முதல் ஆட்டம் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இருந்து இவ்விரு அணிகளும் 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 9-ல் பெல்ஜியமும், 8-ல் இந்தியாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story