உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்..!


உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடக்கம்..!
x

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இன்று 2 கால் இறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது.

புவனேஸ்வர்,

15-வது உலக கோப்பை ஹாக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கேலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா- கொரியா அணிகள் மோதின.

இந்த ஆட்டம் 5-5 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. இதனால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் கொரியா 3-2 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.

ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் நேரடியாகவும், ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி, கொரியா அணிகள் 2-வது சுற்று மூலம் கால் இறுதிக்கும் தகுதி பெற்றன. கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.

இன்று மாலை 4.30 மணிக்கு கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெறும் முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. அந்த அணி 8-0 என்ற கணக்கில் பிரான்சையும், 9-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இருந்தது. அர்ஜென்டினாவுடன் 3-3 என்ற கணக்கில் 'டிரா' செய்தது.

இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். ஸ்பெயினை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறும் ஆர்வத்துடன் இருக்கிறது. ஸ்பெயின் அணி 'லீக்' சுற்றில் 0-2 என்ற கணக்கில் இந்தியாவிடமும், 0-4 என்ற கணக்கில் இங்கிலாந்திடமும் தோற்று இருந்தது. வேல்சை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 2-வது சுற்றில் மலேசியாவை தோற்கடித்தது.

இரவு 7 மணிக்கு நடைபெறும் 2-வது கால் இறுதியில் பெல்ஜியம்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பெல்ஜியம் அணியும் இந்த தொடரில் தோல்வி அடையவில்லை. அந்த அணி தென் கொரியாவை 5-0 என்ற கணக்கிலும், 7-1 என்ற கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இருந்தது. ஜெர்மனியுடன் 2-2 என்ற கணக்கில் 'டிரா' செய்தது. அந்த அணி நியூசிலாந்தை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளும்.

நியூசிலாந்து 'லீக்' சுற்றில் சிலியை மட்டும் 3-1 ன்ற கணக்கில் வென்றது. நெதர்லாந்து (0-4), மலேசியாவிடம் (2-3) தோற்று இருந்தது. 2-வது சுற்றில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story