தேசிய அளவில் தங்க பதக்கம் வெல்ல உதவிய வீரர் தினக்கூலி தொழிலாளி... பின்னணி என்ன?


தேசிய அளவில் தங்க பதக்கம் வெல்ல உதவிய வீரர் தினக்கூலி தொழிலாளி... பின்னணி என்ன?
x

தேசிய அளவிலான ரக்பி போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற வீரர் தினக்கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் கடந்த மே 25-ந்தேதியில் இருந்து வருகிற ஜூன் 3-ந்தேதி வரை கேலோ இந்தியா பல்கலைக்கழக போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில், புவனேஸ்வரின் கே.ஐ.ஐ.டி. அணிக்கு எதிராக பாரதி வித்யாபீத் பல்கலைக்கழக அணி விளையாடி தங்க பதக்கம் தட்டி சென்றது. இந்த போட்டியில், 19-10 புள்ளி கணக்கில் வெற்றி பெற்ற அணியில் இடம் பெற்றவர் பரத் பட்டு சவான்.

போட்டியில் இவர் மட்டுமே 10 புள்ளிகள் எடுத்து அணி வெற்றி பெற உதவியுள்ளார். ஆனால், இவரது வாழ்க்கை கஷ்டம் நிறைந்தது. விவசாயியான இவரது தந்தை உடல்நலம் குன்றியுள்ளார்.

இவரது சகோதரர் படிப்புக்காகவும், இவரது படிப்புக்காகவும், கஷ்டங்களை எதிர்கொண்டு வருகிறார். காலையில் வேலைக்கு செல்கிறார். பின்னர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வந்து, படிக்கிறார். ரக்பி விளையாட்டிற்கான பயிற்சியிலும் ஈடுபடுகிறார்.

திறமையான செயல்பாட்டிற்காக, பல்கலை கழகத்தில் இவரது படிப்பு கட்டணம் பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது. அவருக்கு இது பேருதவியாக உள்ளது. விளையாட்டு ஆசிரியருக்கான படிப்பை தொடர்ந்து வரும் இவர், நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற கனவை கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் மராட்டியத்தின் விளையாட்டுக்கான மிக பெரிய சத்ரபதி விருது வாங்கி உள்ளார். குஜராத்தில் நடந்த தேசிய போட்டிகளில் இவரது மராட்டிய அணி வெள்ளி பதக்கம் வென்றது. எனினும், நிலையான ஒரு வேலைக்காகவும் அவர் காத்திருக்கிறார்.


Next Story