"செம அழகு" மனைவியை புகழ்ந்த ரசிகருக்கு போபண்ணாவின் பதில்


செம அழகு மனைவியை புகழ்ந்த ரசிகருக்கு போபண்ணாவின் பதில்
x

மைதானத்திற்கு வந்திருந்த ரோகன் போபண்ணாவின் மனைவி சுப்ரியா அனன்யா, தன்னுடைய கணவர் ரோகன் போபண்ணாவையும், சானியா மிர்சாவையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

புதுடெல்லி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோகன் போபண்ணா ஜோடி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இருவரும் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தோல்வியை தழுவி அதிர்ச்சியை கொடுத்தனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி என்பது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்று. இதில் வெற்றி பெற்று தன்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என எண்ணியிருந்தார் சானியா மிர்சா.

ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. போட்டி முடிந்த பிறகு கண்ணீர் மல்க பேசிய சானியா மிர்சா, கிராண்ட்ஸ்லாம் பட்டத்துடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என விரும்பினேன். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை.

இருப்பினும் இன்னும் சில டென்னிஸ் போட்டிகளில் எதிர்வரும் காலத்தில் விளையாடினாலும், என்னுடைய கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி இதுதான் என தெரிவித்தார். மேலும், ரவி போபண்ணா தன்னுடைய நீண்ட கால நண்பர் என குறிப்பிட்ட அவர், போபண்ணாவுடன் இணைந்து விளையாடியதை வாழ்நாளில் மறக்க முடியாது, அவருக்கு என்னுடைய நன்றிகள் என உணர்ச்சி மல்க தெரிவித்தார். இந்த போட்டியை சானியா மிர்சா குடும்பத்தினரும், ரோகன் போபண்ணா குடும்பத்தினரும் நேரில் கண்டுகளித்தனர்.

மைதானத்திற்கு வந்திருந்த ரோகன் போபண்ணாவின் மனைவி சுப்ரியா அனன்யா, தன்னுடைய கணவர் ரோகன் போபண்ணாவையும், சானியா மிர்சாவையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அவர்கள் தோல்வியை தழுவியபோதும், இருவரின் விளையாட்டுக்கு பாராட்டு தெரிவிக்கும் வண்ணம் கைத்தட்டினார். அப்போது, எடுக்கப்பட்ட அனன்யா சுப்ரியாவின் புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் நெட்டிசன் ஒருவர், இது ரோகன் போபண்ணாவின் மனைவியா? நான் பார்த்ததில் மிகவும் அழகான பெண் என புகழாரம் சூட்டியுள்ளார். இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள ரோகன் போபண்ணா, இதனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.




Next Story