பெருமை தரும் கீழடி அருங்காட்சியகம்!


பெருமை தரும் கீழடி அருங்காட்சியகம்!
x

நாட்டிலேயே சிந்து சமவெளியின் நகரமயமாக்கல் ‘மிகவும் பண்டை காலத்திய நாகரிகம்’ என்று இந்தியாவில் பெருமையோடு கூறப்பட்ட சூழ்நிலையில், அதே சமகாலத்தில் கி.மு. 6-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்தது என்பதை கீழடியில் நடந்த அகழாய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டிலேயே சிந்து சமவெளியின் நகரமயமாக்கல் 'மிகவும் பண்டை காலத்திய நாகரிகம்' என்று இந்தியாவில் பெருமையோடு கூறப்பட்ட சூழ்நிலையில், அதே சமகாலத்தில் கி.மு. 6-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்தது என்பதை கீழடியில் நடந்த அகழாய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளது. சங்க இலக்கியங்களில் வைகை நதி பற்றியும், அதன் கரையோரங்களில் குறிப்பாக, 'மதுரை மாநகரில் மக்கள் நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தனர், கட்டிடக்கலையில் சிறந்து விளங்கினர்' என்றும், எவ்வளவோ கூறப்பட்டு இருந்தாலும் சரித்திரபூர்வமான சான்று எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்தநிலையில், மதுரைக்கு அருகில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கீழடி கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பில் மத்திய தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் சில ஓடுகளை கண்டு அங்கு அகழாய்வை தொடங்கினர். 2013-2014-ம் ஆண்டில் இந்த குழுவினர் தமிழர்கள் வாழ்ந்தது மட்டுமல்ல, மிகவும் நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தனர் என்பதற்கு பல ஆதாரங்களை கண்டுபிடித்தனர்.

இந்திய சரித்திரத்தையே மாற்றி எழுத வேண்டிய நிலை வந்துவிடுமோ..., தமிழர்களின் நாகரிகம் எவருக்கும் சளைத்தது அல்ல என்று தெள்ளத்தெளிவான சரித்திர சான்றுகளோடு வெளிவர தொடங்குகிறதே என்று கருத்துக்கள் உலா வந்த நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென்று அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால் தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் தொடர்ந்து 5 கட்டங்களாக 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை அகழாய்வை மேற்கொண்டு வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60-க்கும் மேற்பட்ட 'தமிழி' எழுத்து பொறிப்பு கொண்ட பானை ஓடுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதில் 'குவிரன்', 'ஆதன்' போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளதை பார்த்தால், அந்த பகுதியில் வாழ்ந்த பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்று இருந்தனர் என்பது புலனாகிறது. இதுமட்டுமல்லாமல் இங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் விவசாயத்திலும், வணிகத்திலும் மேலோங்கி இருந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் அளவுக்கு மட்கலன்கள், இரும்பு, நெசவு, மணிகள், சங்கு வளையல்கள் ஆகிய தொழில்களை மேற்கொண்டிருந்தனர் என்பதற்கும் பல அகழாய்வு சான்றுகள் இருக்கின்றன.

கட்டிட கலையில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள். கங்கை சமவெளியோடு மட்டுமல்லாமல், ரோம் நாட்டுடனும் வணிக பரிமாற்றம் செய்துள்ளதற்கான சான்றுகள் இந்த அகழாய்வில் கிடைத்துள்ளன. இதையெல்லாம் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் அகழாய்வு நடக்கும் இடத்தில் 31 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள ஒரு பிரமாண்டமான அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

2,600 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் எப்படி வாழ்ந்து இருக்கிறார்கள்? என்பதை அறிந்து ஒவ்வொரு தமிழரும் நெஞ்சை நிமிர்த்தி 'தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா...' என்று பெருமை கொள்ள வைக்கும் இந்த அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது போல, 'உலக தமிழர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும். கீழடியில் அகழாய்வை இன்னும் தீவிரமாக நடத்த வேண்டும். கீழடி போல நெல்லையிலும் பொருநை அருங்காட்சியகம் தயாராகி வருகிறது', என்று அவர் அறிவித்ததும் மட்டற்ற மகிழ்ச்சியே தருகிறது. வைகை போல அனைத்து ஆற்று பள்ளத்தாக்குகளிலும் அகழாய்வு நடத்த வேண்டும் என்பது அகழாய்வு நிபுணர்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story