வேளாண்மை இனி வேகம் எடுக்கும்


வேளாண்மை இனி வேகம் எடுக்கும்
x

ஆதிகாலத்தில் மிருகங்களை போல கண்டதை வேட்டையாடியும், கிடைத்ததை உண்டும் வாழ்ந்து வந்த மனிதனின் முதல் தொழில் வேளாண்மைதான்.

ஆதிகாலத்தில் மிருகங்களை போல கண்டதை வேட்டையாடியும், கிடைத்ததை உண்டும் வாழ்ந்து வந்த மனிதனின் முதல் தொழில் வேளாண்மைதான். ஆக, மனிதனை நாகரிக வாழ்வுக்கு கொண்டுவந்த வாயில் வேளாண்மைதான். ஆனால் வேளாண்தொழிலில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயி நஷ்டப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகத்தொடங்கியதால், இந்த தொழில் மீதுள்ள ஈர்ப்பு குறைய தொடங்கியது. இந்த சூழ்நிலையில் வேளாண்தொழில் இல்லையென்றால் உலகம் இல்லை என்ற நிலையில், இந்த தொழிலுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகள் அனைத்து நாடுகளிலும் இப்போது மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் வேளாண்மைக்கென்று தனியாக ஒரு 'பட்ஜெட்'டை தாக்கல் செய்தார். இதனால் வேளாண்தொழில் புது வேகம் பெற்றது. பல உதவிகள், மானியங்கள், வசதிகள் வேளாண்தொழிலுக்கு அவரால் வழங்கப்பட்டதைத்தொடர்ந்து, எல்லோருமே விவசாயத்தின் பக்கம் தங்களது புதிய பார்வையை செலுத்தினார்கள். 'தரிசு நிலங்களை வீணாக விட்டு விடாதீர்கள், அதற்குரிய பயிரை சாகுபடி செய்யுங்கள்' என்று அரசு அறிவுறுத்தியது. இதன் பயனாக இந்தாண்டுக்கான வேளாண் 'பட்ஜெட்' நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட நாளில், 35 ஆண்டுகளாக நெல் விளையாத மானாவாரி நிலத்தில் ஆழ்குழாய் கிணறு போட்டு இயற்கை முறையில் பாரம்பரிய நெல் வயலாக மாற்றி நல்ல விளைச்சலை கண்ட கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளானைப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வராஜுக்கு, தலைமை செயலாளர் வெ.இறையன்பு பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023-ம் ஆண்டை சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாக ஐ.நா.பொதுசபை அங்கீகரித்துள்ளது. அந்தவகையில் சிறுதானிய உற்பத்திக்கு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் 'பட்ஜெட்'டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. சிறு தானிய உற்பத்தி மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்க பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வுக்காக பல மாவட்டங்களுக்கு சென்றபோது, அவரை சந்தித்த விவசாயிகள், 'வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை' என்றனர்.

அதை மனதில் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் தொழிலில் பல எந்திரங்களை வாங்குவதற்காக, விவசாயிகளுக்கு மானியங்களை வழங்கியுள்ளார். 'இயற்கை வேளாண்மை' என்னும் ரசாயனமில்லா விவசாயம், நஞ்சில்லா விவசாயத்துக்காக பல அறிவிப்புகளை வெளியிட செய்துள்ளார். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக கிடைக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும், பொது இடங்களில் நடவு செய்ய 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் பனைக்கென தனி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும், வெளிநாடுகளில் அதிக மகசூலை எப்படி எடுக்கிறார்கள்? என்பதை அறிய விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லுதல், வீடுகளுக்கு பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு, காய்கறி விதை பொட்டலங்களை வழங்கல், அரிசி மட்டுமல்லாமல் எல்லா தானியங்களிலும் அதிக விளைச்சல் எடுக்கும் விவசாயிகளுக்கு பரிசு என்று அடுக்கடுக்காக வேளாண் தொழில் வேகமெடுக்கும் பல அறிவிப்புகள் கொண்ட இந்த வேளாண் 'பட்ஜெட்' எல்லா பயிர்களுக்கும், எல்லா மாவட்டங்களிலும் முக்கியத்துவம் கொடுக்கும் 'பட்ஜெட்'டாகும்.

ஆனால் அனைத்து நீர்நிலைகளையும் பாழ்படுத்திக் கொண்டு இருக்கும் ஆகாய தாமரையை அகற்ற ஒரு பெரிய இயக்கம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story