ஜவுளி தொழில் மாநிலமாகும் தமிழ்நாடு !


ஜவுளி தொழில் மாநிலமாகும் தமிழ்நாடு !
x

பொதுவாக விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பை தருவது நெசவு தொழிலாகும்.

பொதுவாக விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பை தருவது நெசவு தொழிலாகும். தமிழ்நாட்டில் நெசவு தொழிலுக்கும், ஜவுளி தொழிலுக்கும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தநிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திரமோடி தனது 'டுவிட்டர்' பதிவில், "தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பிரதமர் மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும். இந்த பூங்காக்கள் 'இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்காக உற்பத்தி செய்வோம்' என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழும். பண்ணையில் இருந்து நூல் இழை, அதிலிருந்து தொழிற்சாலை, அதிலிருந்து ஆடை வடிவமைப்பு, அதிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என 'எப்' என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் 5 வார்த்தைகளின் அடிப்படையிலான தொலைநோக்கு பார்வைக்கேற்ப ஜவுளித்துறையை இந்த பூங்காக்கள் வலுப்படுத்தும். பிரதமரின் மித்ரா அதாவது பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை பூங்காக்கள் ஜவுளித்துறைக்கு அதிநவீன உள்கட்டமைப்புகளை வழங்குவதுடன் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும்" என்று கூறியிருந்தார்.

7 மாநிலங்களில் இந்த ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தவுடன், முதல் ஜவுளிப்பூங்கா தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரத்தில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வந்தவுடன் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்தார். உடனடியாக கடந்த 18-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தொழில், வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், 'தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்திடம் 1,052 ஏக்கர் நிலம் இருக்கிறது. எனவே சிப்காட் நிறுவனத்தின் மூலம் இந்த ஜவுளிப்பூங்காவை செயல்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டது. நாட்டின் முதல் மெகா ஜவுளிப்பூங்காவை விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் அமைப்பதற்கான தொடக்க விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியபடி 1,052 ஏக்கர் சிப்காட் நிலத்தில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இந்த மெகா ஜவுளிப்பூங்கா மூலம் தமிழ்நாட்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்போகிறது. இது மிகவும் நல்ல செய்தியாகும். தமிழகத்தில் ஜவுளித்துறை மதிப்புகூட்டு பொருட்கள் இப்போது பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. இனி அனைத்தும் ஒரே இடத்தில் உற்பத்தி செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு குறைந்து, அதன் விலையும் குறைவாக இருக்கும். முதல் நாளிலேயே இந்த ஜவுளிப்பூங்காவில் ரூ.1,231 கோடி முதலீட்டில் தொழில் தொடங்க 7 பெரும் தொழில் நிறுவனங்களுடனும், 4 சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இது தவிர, தமிழக 'பட்ஜெட்'டில் சேலத்தில் ஒரு மாபெரும் ஜவுளிப்பூங்காவும், மேலும் மாநிலத்தில் 10 சிறிய கைத்தறி பூங்காக்களும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புகளெல்லாம் செயல்பாட்டுக்கு வரும்போது வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கும் ஜவுளித்தொழில் வளர்வதோடு மட்டுமல்லாமல் புஞ்சை நிலங்களில் சாகுபடி செய்யப்படும் பருத்தி பயிர் வேளாண்மையும் உயர்ந்து விவசாயிகள் அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வும் வளம்பெறும். ஜவுளிப்பூங்காக்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதேநேரத்தில் மூலப்பொருளான பருத்தி சாகுபடியை பெருக்க விவசாயிகளையும் அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.


Next Story