திருக்குறளில் புதிய சாதனை


திருக்குறளில் புதிய சாதனை
x
தினத்தந்தி 4 Dec 2022 1:30 AM GMT (Updated: 4 Dec 2022 1:30 AM GMT)

முதலில் 100 திருக்குறள்களை எழுதினேன். பிறகு 200 குறள்களை எழுதி முடித்தேன். அதன் மூலம் கிடைத்த உற்சாகத்தால் 1330 திருக்குறள்களையும் ஒரே தாளில் எழுத முடிவெடுத்தேன். 15x42 சென்டி மீட்டர் நீள அகலத்தில், தொடர்ந்து இடைவிடாமல் 12 மணி நேரத்தில் முழுமையாக எழுதி முடித்தேன்.

ல்வாழ்வுக்குத் தேவையான கருத்துக்களைக் கூறும் 'திருக்குறள்' உலக அளவில் புகழ் பெற்றது. இதை மையமாக வைத்து பலர் புதுப்புது சாதனைகளை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் 1330 குறள்களையும் ஏ3 அளவு வெள்ளைத்தாளில் எழுதி புதிய சாதனை படைத்திருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீயஜலட்சுமி. இதுகுறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது இங்கே...

"எனது அப்பா செல்வகுமார் காவல் துறையில் பணிபுரிகிறார். அம்மா தனலட்சுமி இல்லத்தரசி. நான் தனியார் கல்லூரியில் பிசியோதெரபி படிக்கிறேன்.

ஒரு நாள் வீட்டில் தனியாக இருந்த சமயம் திருக்குறள் புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது திருக்குறள் தொடர்பாக ஏதேனும் செய்யலாம் என்று நினைத்து ஏ3 தாளில் குறள்களை வரிசையாக எழுதத் தொடங்கினேன்.

முதலில் 100 திருக்குறள்களை எழுதினேன். பிறகு 200 குறள்களை எழுதி முடித்தேன். அதன் மூலம் கிடைத்த உற்சாகத்தால் 1330 திருக்குறள்களையும் ஒரே தாளில் எழுத முடிவெடுத்தேன். 15x42 சென்டி மீட்டர் நீள அகலத்தில், தொடர்ந்து இடைவிடாமல் 12 மணி நேரத்தில் முழுமையாக எழுதி முடித்தேன். திருக்குறள்களை எழுதுவதற்காக சிறப்பான கருவிகள் எதுவும் பயன்படுத்தவில்லை. நீல மற்றும் கருப்பு நிற சாதாரண மை பேனாக்களை மட்டுமே உபயோகித்தேன்.

இந்த முயற்சியை முதலில் என்னுடைய பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. முழுவதுமாக எழுதி முடித்தவுடன் தான் அவர்களிடம் கூறினேன். அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

இந்த சாதனையை செய்வதற்கு விழிகள் அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உதவி செய்தனர். எனது முயற்சியை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ், பதக்கம் மற்றும் கோப்பை வழங்கியது. கலாம் உலக சாதனை புத்தகத்தில் எனது சாதனை இடம்பெற்றுள்ளது.

அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த அக்டோபர் 15-ந் தேதி செங்கல்பட்டில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறக்கட்டளையின் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள 100 சாதனை மாணவர்களுக்கு 'கனவு மாணவர் விருது' வழங்கப்பட்டது. அந்த விருது பெற்றவர்களில் நானும் ஒருவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விருது பெற்றதற்காக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் என்னை அழைத்து பாராட்டினார்.

இந்த சாதனை செய்தபோது, ஏ3 தாளில் திருக்குறள்களை மிகவும் சிறிய எழுத்துக்களாக எழுதியதால் கை மூட்டுகள் வலித்தது. ஆனால் முயற்சியை கைவிடக் கூடாது என்று முழுநம்பிக்கையுடன் எழுதினேன். கடைசியாக திருக்குறளை முழுமையாக எழுதி முடிக்கும்போது அளவற்ற சந்தோஷமடைந்தேன்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தினமும் 5 திருக்குறள்களையாவது படித்து, அதன் அர்த்தத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தமிழ் மொழியை வளர்க்கும் விதமாக மாணவர்கள் ஏதாவது ஒரு சாதனையை செய்ய முன்வரவேண்டும். பெற்றோர்கள் அவர்களை ஊக்குவித்து துணையாக இருக்க வேண்டும்" என்று புன்னகை மலர தெரிவித்தார் ஸ்ரீயஜலட்சுமி.


Next Story