கார்கள் சர்வீஸ் துறையில் அசத்தும் பெண்


கார்கள் சர்வீஸ் துறையில் அசத்தும் பெண்
x
தினத்தந்தி 4 Dec 2022 1:30 AM GMT (Updated: 4 Dec 2022 1:30 AM GMT)

எங்கள் சர்வீஸ் சென்டரை ஆரம்பித்தோம். தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தன. சரியான வேலை ஆட்கள் கிடைக்கவில்லை. தனியாக எப்படி வாகனங்களைக் கையாள்வது என்று திகைத்தேன். சர்வீஸ்களுக்கு தகுந்த கட்டணங்களை நிர்ணயம் செய்வது, மார்க்கெட்டிங் செய்வது ஆகியவை குறித்து படிப்படியாக தெரிந்து கொண்டேன்.

ண்கள் மட்டுமே இடம் பெற்றிருந்த பல துறைகளில், தற்போது பெண்களும் தங்கள் திறமைகளைக் காட்டி வருகின்றனர். உயர் பதவிகள் மட்டுமில்லாமல், உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் பணிகளையும், தொழில்களையும் சிறப்பாகச் செய்கின்றனர். அந்த வரிசையில் ஆண்களுக்கு இணையாக கார்களை சர்வீஸ் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த ஷர்மிளா தேவி. அவருடன் ஒரு சந்திப்பு.

"நான் மைக்ரோபயாலஜி மற்றும் கார்டியோ எக்கோ படிப்புகளை முடித்திருக்கிறேன். சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், இதயம் தொடர்பான மருத்துவப் பிரிவில் 'எக்கோ டெக்னிஷியன்' ஆக சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். திருமணத்துக்குப் பிறகு வேலையைத் தொடர முடியவில்லை. குடும்பத்தைக் கவனித்து வந்தேன்".

கார்களை சர்வீஸ் செய்யும் நிறுவனம் தொடங்கும் எண்ணம் வந்தது எப்படி?

ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து எனக்குள் இருந்து வந்தது. அதுபற்றி யோசித்தபோதுதான், வாகனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றை பராமரிக்க, பழுதுபார்க்க சர்வீஸ் ஷெட்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தால் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த முடியும் என்று தோன்றியது. எனவே கார், பைக் வாட்டர் வாஷ் சர்வீஸ், மெக்கானிக் சர்வீஸ் செய்து கொடுக்கும் நிறுவனத்தைத் தொடங்க முடிவெடுத்தேன்.

அரக்கோணம் மோசூர் சாலையில் எங்கள் சர்வீஸ் சென்டரை ஆரம்பித்தோம். தொடக்கத்தில் சில சிரமங்கள் இருந்தன. சரியான வேலை ஆட்கள் கிடைக்கவில்லை. தனியாக எப்படி வாகனங்களைக் கையாள்வது என்று திகைத்தேன். சர்வீஸ்களுக்கு தகுந்த கட்டணங்களை நிர்ணயம் செய்வது, மார்க்கெட்டிங் செய்வது ஆகியவை குறித்து படிப்படியாக தெரிந்து கொண்டேன்.

உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

மற்ற நிறுவனங்களின் சேவை, தரம், செயல்பாடுகள், கட்டணம் குறித்து ஆய்வு செய்தேன். அவர்களை விட அதிக தரத்திலும், குறைந்த கட்டணத்திலும் எங்கள் நிறுவனத்தின் சேவை அமையுமாறு பார்த்துக் கொண்டேன். அதனால் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர்.

என்னிடம் பணிபுரிபவர்களும் அதிக பொறுப்புணர்வோடு நடந்து கொள்கின்றனர். எனது கணவரும், தந்தையும் எனக்கு பக்கபலமாக இருக்கின்றனர். நான் வெளியூர் செல்லும் நேரங்களில் அவர்கள் பொறுப்பாக நிர்வகிக்கின்றனர்.

எந்தத் துறையாக இருந்தாலும், வெற்றி பெறுவதற்கு உழைக்க வேண்டும். விடாமுயற்சியும், உழைப்பும் இருந்தால், தெரியாத தொழிலிலும் வெற்றி அடையலாம். இதையே நானும் பின்பற்றுகிறேன்.

உங்களிடம் உள்ள மற்ற திறமைகள் பற்றி கூறுங்கள்?

கைவினைப் பொருட்கள் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏதாவது ஒரு 'தீம்' அடிப்படையில் கைவினைப் பொருட்கள் செய்வேன். அதன்படி டிவைன் தீம், கார்டனிங் தீம், நேச்சர் தீம், இன்டோர் செடிகள் தீம், இன்டோர் லிவ்விங் ரூம் தீம், கிச்சன் தீம் என நான் செய்த பொருட்கள் எனது வீடு முழுவதும் நிறைந்துள்ளன. உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அவற்றை பரிசாகக் கொடுப்பதும் உண்டு.

சாக்லெட் தயாரிப்பில் எனக்கு ஆர்வம் அதிகம். விதவிதமான சாக்லெட்டுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். அவற்றுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆர்டர்கள் கிடைக்கின்றன.


Next Story