கனவை கைப்பற்றிய எலெனா


கனவை கைப்பற்றிய எலெனா
x
தினத்தந்தி 21 Aug 2022 1:30 AM GMT (Updated: 21 Aug 2022 1:31 AM GMT)

கஜகஸ்தான் நாட்டின் கூட்டமைப்பு சார்பில் அவருக்கு நிதி உதவி கிடைத்தது. ஆனால், அந்த நிதி உதவியைப் பெற அவர் கஜகஸ்தான் குடியுரிமைக்கு மாற வேண்டி இருந்தது. எலெனா, தனது கனவான டென்னிஸ் விளையாட்டைத் தொடர்வதற்காக ரஷியாவில் இருந்து கஜகஸ்தான் குடியுரிமைக்கு மாறினார்.

ல இடர்பாடுகளுக்குப் பிறகு பொருத்தமான விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, கடினமான உழைப்பின் காரணமாக, தனக்கு நிதி உதவி அளித்த நாட்டுக்கு பெருமைத் தேடி தந்தவர் டென்னிஸ் வீராங்கனை, எலெனா ரைபகினா.

ரஷியாவில் உள்ள மாஸ்கோவில் 1999-ம் ஆண்டு பிறந்த எலெனா, சிறுவயதில் இருந்தே தனது சகோதரியுடன் ஜிம்னாஸ்டிக் மற்றும் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட்டை பயின்று வந்தார். அவற்றில் தொழில் முறை வீராங்கனையாக வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது. ஆனால், மிகவும் உயரமாக இருந்ததால், அந்த விளையாட்டுகளில் அவரால் தொடர்ந்து பயிற்சி பெற இயலவில்லை.

அந்தத் தருணத்தில்தான் எலெனாவின் தந்தை, அவருக்கு டென்னிஸ் விளையாட்டை அறிமுகம் செய்தார். இதையடுத்து டென்னிஸ் விளையாட்டைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார் எலெனா. எதைத் தனது பலவீனமாகக் கருதி முந்தைய விளையாட்டுகளில் இருந்து விலகினாரோ, அந்த உயரமே டென்னிஸ் விளையாட்டில் அவருக்கு பலமாக அமைந்தது.

அதேசமயம் டென்னிஸ் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட அவருக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது.

கஜகஸ்தான் நாட்டின் கூட்டமைப்பு சார்பில் அவருக்கு நிதி உதவி கிடைத்தது. ஆனால், அந்த நிதி உதவியைப் பெற அவர் கஜகஸ்தான் குடியுரிமைக்கு மாற வேண்டி இருந்தது. எலெனா, தனது கனவான டென்னிஸ் விளையாட்டைத் தொடர்வதற்காக ரஷியாவில் இருந்து கஜகஸ்தான் குடியுரிமைக்கு மாறினார்.

2018-ம் ஆண்டில் இருந்து கஜகஸ்தான் பிரதிநிதியாக, டென்னிஸ் விளையாட்டில் தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டிக் கொண்டார். இந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற 'விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்ஷிப்' போட்டியில், அரை இறுதியில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலெப் என்பவரை எளிதாக தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் எலெனா.

இறுதிப் போட்டியில், டென்னிஸ் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள ஒன்ஸ் ஜபீர் வீராங்கனையை, 23-ம் இடத்தில் இருந்த எலெனா சந்தித்தார். இருவருமே கடுமையாக விளையாடினர். ஏனென்றால், ஒன்ஸ் வெற்றி பெற்றால் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் அரபு வீராங்கனை என்ற பெருமையும், எலெனா வெற்றி பெற்றால் கஜகஸ்தானிலேயே முதல் சாம்பியன் என்ற பெருமையும் கிடைக்கும்.

இறுதியில், 'விம்பிள்டன் சாம்பியன்ஷிப் வெற்றி' எலெனாவுக்கு சொந்தமானது. டென்னிஸ் விளையாட்டில் கிராண்ட்ஸ்லாம் என்பது ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன் (விம்பிள்டன்) மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு பெரிய சாம்பியன்ஷிப்களையும், ஒரே காலண்டர் சீசனில் வென்றதன் சாதனையைக் குறிக்கிறது. அப்படி தனது முதல் கிராண்ட்ஸ்லாமான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பை வெற்றி பெற்று தனது கணக்கை தொடங்கியுள்ளார், எலெனா. அதுபோல, டென்னிஸ் விளையாட்டில் முதல் முறையாக தனிநபர் பிரிவில் சர்வதேச அளவில் மிகப்பெரிய சாம்பியன்ஷிப்

பட்டம் பெற்ற முதல் கஜகஸ்தான் வீராங்கனை என்ற பெருமையும் பெற்றுள்ளார்.


Next Story