மாறுவேடத்தால் மாற்றம் ஏற்படுத்தும் பூங்கொடி


மாறுவேடத்தால் மாற்றம் ஏற்படுத்தும் பூங்கொடி
x
தினத்தந்தி 28 Aug 2022 1:30 AM GMT (Updated: 28 Aug 2022 1:30 AM GMT)

சிறு வயதில் இருந்து புத்தகங்கள் வாசிப்பதும், அவற்றைப் பற்றி பேசுவதும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. குழந்தைகள் சார்ந்து நிறைய வாசிக்கத் தொடங்கிய பின்பு, கதைகள் குழந்தைகளின் வாழ்வில் நடத்தும் அற்புதங்கள் ஏராளம் என்பதை அறிந்தேன்.

ள்ளிக் குழந்தைகளுக்கு நேரடியாகவும், இணையம் வழியாகவும் கதைகள் சொல்வது, புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்கள் செய்வது, நூலகம் இல்லாத அரசுப் பள்ளிகளுக்கு புதிதாக நூலகம் அமைத்து தருவது, மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இயற்கை விவசாயம் செய்வது என்று பல தளங்களில் இயங்கி வருகிறார் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் வசிக்கும் பூங்கொடி.

பள்ளி, கல்லூரி நாட்களில் சிறப்பாக செயல்பட்டமைக்காக தங்கப்பதக்கம் பெற்ற இவர், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர்கள் சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி போன்றவர்களின் அணிகளில் பேசியவர். தன்னம்பிக்கை மேடை பேச்சாளர்.

முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பின் 'தஞ்சை பிரகாஷ் நினைவு விருது', தமிழால் இணைவோம் உலகத் தமிழ் பேரியக்கம் அமைப்பின் 'தங்க மங்கை விருது-2022', தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வழங்கும் 'சிறந்த கதை சொல்லி' போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். இவரிடம் பேசியதிலிருந்து:

கதை சொல்லியாக மாறிய அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

பல காலங்களாக கதை கேட்டும், கதை சொல்லியும் வந்தது நம் சமூகம். ஒவ்வொரு வீட்டிலும் தாத்தா-பாட்டி என்ற தலை சிறந்த கதை சொல்லிகள் இருந்தார்கள். கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வருவது, நகர்புற வாழ்வு, பொருளாதார தேடல்கள், மதிப்பெண்கள் நோக்கி நகரும் கல்வி, தொலைக்காட்சி, அலைபேசி என்று பல காரணிகளால் இன்று குடும்பங்களில் கதை சொல்லல் குறைந்து வருவது வருத்தத்துக்குரியது.

சிறு வயதில் இருந்து புத்தகங்கள் வாசிப்பதும், அவற்றைப் பற்றி பேசுவதும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. குழந்தைகள் சார்ந்து நிறைய வாசிக்கத் தொடங்கிய பின்பு, கதைகள் குழந்தைகளின் வாழ்வில் நடத்தும் அற்புதங்கள் ஏராளம் என்பதை அறிந்தேன்.

என் மகனுக்கு நிறைய கதைகள் சொல்ல ஆரம்பித்தேன். மகளும் பிறந்த பிறகு, எங்கள் மூவரின் உலகமும் கதைகளால் நிரம்பியது. தோழிகளின் பிள்ளைகளும் கதை உலகத்தில் மெல்ல நுழைய ஆரம்பித்தபோது, கிடைத்த நேரம் எல்லாம் அவர்களுக்கும் கதைகள், வாசிப்பு என்று தொடர்ந்தது. பிறகு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கதை சொல்லும் பயணத்தை தொடங்கி, பல்வேறு தளங்களில் பயணிக்கிறேன்.

அடிப்படையில் பொறியியல் படித்து கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றிய என் பயணம், இப்போது கதை சொல்லியாகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும் தொடர்கிறது. வளரும் தலை

முறையினரை மகிழ்வாக்கவும், நற்பண்புகளை வளர்க்கவும் கதைகள் உதவிகரமாக இருக்கும். இந்த கதை சொல்லி பயணத்தில் எப்போதும் குழந்தைகளோடு இருப்பதால் மன நிறைவும், குழந்தை மனமும் வாய்க்கப் பெறுகிறது.
உங்களுடைய கதை சொல்லலில் எத்தகைய புதுமைகள் புகுத்தப்படுகிறது?

ஆரம்ப காலங்களில், கதாபாத்திரத்துக்கு ஏற்ப குரல்கள் மாற்றிப் பேசுவது, பறவை, விலங்குகள் போன்றவற்றின் ஒலிகள் எழுப்புவது, பாடல்கள் போன்றவைகளின் மூலம் கதைகள் சொல்லத் தொடங்கினேன்.

'கல்வியில் நாடகம்' என்ற பயிற்சியின் போது, முதல் முறையாக கண்ணகி வேடமணிந்து ஒரு நாடகமும், வயதான பெண்மணி வேடமணிந்து நாட்டுப் புறக் கதையை கொங்குத் தமிழிலும் சொன்னேன். குழந்தைகள் முதற்கொண்டு, பெரியவர்கள் வரை அனைவரையும் அந்த கதை சொல்லல் முறை பெரிதாக ஈர்த்தது.

ஒரு முறை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கதைகள் மூலம் நற்பண்புகள் வளர்க்கும் பயிலரங்கில், சில நொடி இடைவெளிக்குள் கண்ணகியாகவும், பாண்டிய மன்னனாகவும் மாறி-மாறி கதை சொன்னது என்னை இன்னும் மெருகேற்றியது.

பிறகு கதை சொல்லப்போகும் இடங்களில் எல்லாம் வேடம் பூண்டு கதை சொல்வதை என்னிடம் விரும்பி கேட்கத் தொடங்கினர். குறத்தி வேடம், அரசர் வேடம், விவசாயி வேடம், பேய் என்று கதைக்கு தகுந்தாற் போல வேடமணிந்து கதை சொல்கிறேன்.

அரசுப் பள்ளிகளுக்கு நூலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி உருவானது?

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பிறகு, கதை சொல்லல் எங்கள் பகுதிகளில் பெரியளவில் இல்லை என்பதை உணர்ந்தேன். மேலும் இங்கேஉள்ள அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரிய நட்புகளிடம் விசாரித்தபோது, பெரும்பான்மையான பள்ளிகளின் குழந்தைகளுக்கு நூல்கள் வாசிக்க ஆர்வம் இருந்தாலும், சமகால சிறார் நூல்கள் கிடைப்பதில்லை என்பதை அறிந்தேன்.

ஆசிரியர்கள் லீலா கண்ணன், கண்ணபிரான் ஆகியோர் மூலமாக நிறைய பள்ளிகளின் தொடர்புகள் கிடைத்தது. வாரம் ஒரு அரசுப்பள்ளிக்கு கதை சொல்ல பயணிக்கத் தொடங்கினேன். கூடவே அவர்களுக்கு நூல்கள் வழங்கலாம் என்று நினைத்து, என் கல்லூரி நண்பர் அருண் உதவியுடன் நூல்கள் வழங்கி வருகிறேன்.

மேலும் கல்வி சார்ந்து நிறைய உதவிகள் செய்வதற்கு கணவர் மற்றும் என் நண்பர்கள் இருக்கின்றனர். வளரும் தலைமுறையின் வாழ்வை வாசிப்பு வளமாக்கும் என்பதால் நூல்கள் வழங்கும் எண்ணம் வந்தது.

தன்னம்பிக்கை உரைகள் மூலம், பெண்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரைகள் என்ன?

பொருளாதார மற்றும் கருத்தியல் சுதந்திரமும் பெண்கள் பெற வேண்டும். அவர்கள் தங்களின் மனத்தடைகளை உடைத்து வெளியே வர வேண்டும். இந்தச் சமூகத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்கள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும்போதும், உழைப்பை கொடுக்கும்போதும் இன்னும் உயரிய நிலையை சமூகம் அடையும். பெண்கள் கல்வியில் தன்னிகரற்று திகழ வேண்டும். ஆரோக்கிய வாழ்வில் அக்கறை கொள்ளவேண்டும் என்பதே என் முக்கிய அறிவுரையாக எப்போதும் இருக்கும்.

நீங்கள் மேற்கொண்டு வரும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாற்றம் ஏற்படுத்துகிறதா?

பெண்களுக்கு தற்போது வரும் நோய்களில், கருப்பை வாய் மற்றும் மார்பகப் புற்று நோய் அதிகளவில் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த விழிப்புணர்வு பெண்களிடையே மிகக்குறைவு தான். விழிப்புணர்வு ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பல பெண்கள் 'மேமொகிராம் பரிசோதனைகள்' செய்து கொண்டனர். இன்னும் தொடர்ந்து கல்லூரிகளில் மாணவிகளிடையே, பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொடர்ந்து உரையாட வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்.


Next Story