முயற்சியால் முன்னேறும் வனஜா


முயற்சியால் முன்னேறும் வனஜா
x
தினத்தந்தி 18 Dec 2022 1:30 AM GMT (Updated: 18 Dec 2022 1:30 AM GMT)

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணத்துடன், ‘பாஸ்ட் புட்’ கலாசாரத்திற்கு ஏற்றதுபோல, இயற்கையான உணவுகளை வழங்கி வருகிறேன்.

'தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தால் எந்தப் பெண்ணும் வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறிவிடலாம்' என்பதற்கு நிகழ்கால உதாரணமாக வலம் வருகிறார் வனஜா. திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் இயற்கை உணவுகள் தயாரித்து விற்பனை செய்து வரும் அவருடன் ஒரு சந்திப்பு.

"அரியலூரைச் சேர்ந்த நான் திருமணத்துக்குப் பிறகு திருச்சிக்கு வந்தேன். சமயபுரத்தில் கடந்த 22 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவர் முருகன், இதய நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். குடும்பத்தின் தேவைகளை சமாளிப்பதற்காக கணவருடன் சேர்ந்து உழைத்த நான், 2008-ம் ஆண்டு முதலே திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் சைக்கிளில் டீ விற்பனை செய்தேன்.

பின்னர் புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தூதுவளை சூப், முடக்கத்தான் சூப் மற்றும் பனியார வகைகளை தயாரித்து விற்றேன்.

கல்லூரி மாணவ, மாணவிகள் நான் தயாரித்த உணவுகளை விரும்பி வாங்கி சாப்பிட்டனர். அதன் மூலம் கிடைத்த லாபத்தை வைத்து திருச்சி காவேரி பாலத்திற்கு அடியில் தள்ளுவண்டியில் கடை போட்டேன். படிப்படியாக முன்னேறி அம்மா மண்டபம் பகுதியில் சிறிய கடை திறந்து உணவு விற்பனை செய்து வருகிறேன்.

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணத்துடன், 'பாஸ்ட் புட்' கலாசாரத்திற்கு ஏற்றதுபோல, இயற்கையான உணவுகளை வழங்கி வருகிறேன்.

முடக்கத்தான், தூதுவளை, வல்லாரை, கொள்ளு, முருங்கைக்கீரை, வாழைத்தண்டு போன்ற சூப் வகைகளையும், பீட்ரூட் பால், பருத்திப் பால், கேரட் பால், கத்தாழை ஜூஸ், அருகம்புல் ஜூஸ், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், உளுந்தங்களி, முடக்கத்தான் அடை, முருங்கைக்கீரை அடை, நவதானிய சுண்டல், மூலிகை ரசத்துடன் கூடிய பானிப்பூரி, காய்கறிகள் கலந்த அரிசி நூடுல்ஸ் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறேன்.

இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எனது இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்கிறேன். எனது முயற்சியும், உழைப்பும் மற்றவரின் உதவியை எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையோடு வாழ வைத்துள்ளது.

சமூகத்தில் தனியொரு பெண்ணாகப் போராடி நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். அதை பாராட்டும் வகையில் ஹோலி கிராஸ் கல்லூரி, இந்த ஆண்டு எனக்கு 'சிறந்த பெண் சாதனையாளர்' விருதை வழங்கியுள்ளது''.


Next Story