உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள்தான் முன்னுதாரணம் - தேன்மொழி


தினத்தந்தி 11 Sep 2022 1:30 AM GMT (Updated: 11 Sep 2022 1:31 AM GMT)

இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, பேருந்து விபத்தில் எனது இரண்டு கால் எலும்புகளும் உடைந்து போயின. அறுவை சிகிச்சை செய்ய வசதியில்லாமல், ஓராண்டுக்கும் மேலாக ஊரிலேயே சிகிச்சை செய்து கட்டுப் போட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், அதன்பிறகும் குணம் அடையாததால், பல நெருக்கடிகளுக்கிடையில் அறுவை சிகிச்சை செய்தபின்பு நடக்கத் தொடங்கினேன்.

"எந்தப் பெண்ணும் மற்றொருவரைச் சார்ந்து இருக்கக்கூடாது. சுயமாக சம்பாதிப்பது பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன" என்கிறார் தேன்மொழி.

சொந்த வாழ்க்கையில் அடுத்தடுத்து சோகங்களைச் சந்தித்த தேன்மொழி, தற்போது தனது நிறுவனத்தின் மூலம் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். 'உன்னால் முடியாது' என்று தன்னம்பிக்கையை குறைக்கும் விதமாக பேசிய பலரை, தனது முன்னேற்றத்தின் மூலம் வியக்க வைத்திருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.

"ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் எனது சொந்த ஊர். பெற்றோர் ராஜு - கலாவதி. நான் அவர்களுக்கு மூத்த மகளாகப் பிறந்தேன். எனக்கு அடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். 'ஆண் பிள்ளை இருந்தால் குடும்பத்தைத் தாங்கும், பெண் பிள்ளைகளை எப்படிக் கரைசேர்ப்பது?' என்பதே பெற்றோருக்குப் பெரும் கவலையாக இருந்தது.

மூன்று குழந்தைகளை வளர்க்க முடியாத நிலையில், எனது தங்கைகளை அழைத்துக் கொண்டு என் தாய் கரூரில் உள்ள அவரின் தாய்வீட்டுக்கே சென்றுவிட்டார். அதனால் நான் மட்டும் ஈரோட்டில் தாத்தா-பாட்டி உதவியில் வளர்ந்தேன்.

வணிகவியலில் இளங்கலைப் பட்டத்தையும், தொழில் மேலாண்மையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றிருக்கிறேன். முஜிபுர் ரகுமான் என்பவரை காதலித்து பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டேன். வீட்டில் இருந்தே செய்யும் வேலைகளை அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பெற்று, கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்குப் பணி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன்.

தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கரூரில் வசிக்கிறேன்.

எனது கணவரும் என்னுடன் நிறுவனத்தைக் கவனித்து வருகிறார். மகன் ஆதில் இரண்டாம் வகுப்பும், மகள் அஹானா விளையாட்டுப் பள்ளியிலும் படித்து வருகிறார்கள். அவர்களை மாடலிங் துறையில் ஈடுபடுத்தியிருக்கிறேன். நானும் மாடலிங் செய்து வருகிறேன்.

பெண்கள் சுயமாக சம்பாதிப்பதற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? அதை எப்படி செயல்படுத்தினீர்கள்?

இட்லி வியாபாரம் செய்து கொண்டிருந்த பாட்டி, பொருளாதார சூழ்நிலையால் பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிடுமாறு என்னிடம் சொன்னார். ஆனால் நான், தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கிடைத்த பழைய சீருடைகளையும், புத்தகத்தையும் வைத்து 12-ம் வகுப்பு வரை படித்தேன். கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லாததால், அஞ்சல் வழியில் இளங்கலை வணிகவியல் படித்துக்கொண்டே, பாட்டியுடன் இட்லி வியாபாரத்தைக் கவனித்து வந்தேன்.

இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது, பேருந்து விபத்தில் எனது இரண்டு கால் எலும்புகளும் உடைந்து போயின. அறுவை சிகிச்சை செய்ய வசதியில்லாமல், ஓராண்டுக்கும் மேலாக ஊரிலேயே சிகிச்சை செய்து கட்டுப் போட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், அதன்பிறகும் குணம் அடையாததால், பல நெருக்கடிகளுக்கிடையில் அறுவை சிகிச்சை செய்தபின்பு நடக்கத் தொடங்கினேன்.

அதன் பிறகு குடும்பத்தைக் காப்பாற்ற வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்போது வீட்டில் இருந்தே செய்யும் கம்ப்யூட்டர் தொடர்பான வேலைவாய்ப்புகள் பற்றி கேள்விப்பட்டேன். 'படிப்பே இல்லாமல், கம்ப்யூட்டர் இயக்கவே தெரியாமல், இந்த வேலையை உன்னால் செய்ய முடியாது' என்று பலரும் சொன்னார்கள்.

ஆனால், தொடர் முயற்சியாலும், பயிற்சியாலும் கம்ப்யூட்டர் தொடர்பான அந்த வேலையைக் கற்றுக் கொண்டேன். எனது பணியையும் சிறப்பாக செய்து முதல் மாத ஊதியத்தைப் பெற்றேன். அப்போதுதான் என்னைப் போன்ற நிலையில் உள்ள பெண்களை சொந்தக் காலில் நிற்க வைக்க உதவ வேண்டும் என்ற எண்ணம் வந்தது. மற்றொருவரிடம் இருந்து வாய்ப்பு பெற்று செய்து வந்த பணியை, நானே நேரடியாக வாங்கி பத்துப் பேரை வைத்து செய்யத் தொடங்கினேன்.

நீங்கள் சாதித்தது என்ன?

விபத்தினால் எனது வாழ்க்கையே தலைகீழாக மாறியது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு பெரும் சவால்களைச் சந்தித்தேன். உடல் அளவிலும், மனதளவிலும் இழப்புகளைச் சந்தித்ததோடு, குடும்பத்தைக் காப்பாற்ற சம்பாதிக்கவும் வேண்டியிருந்தது. வைராக்கியத்தோடு முயற்சி செய்தேன், கடுமையாக உழைத்தேன். 2016-ம் ஆண்டில் 20 பேருக்கு வேலை கொடுத்த நான், தற்போது 350 பேருக்கு வேலை கொடுத்திருக்கிறேன். இந்த நிலைக்கு உயர பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் போராட்டங்கள் இல்லாமல் சாதனைகள் செய்ய முடியாது.

இல்லத்தரசிகளுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

'ஆண்கள் சம்பாதிக்க வேண்டும், பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி குடும்பத்தை கவனிக்க வேண்டும்' என்ற மனநிலையை உங்கள் பிள்ளைகளிடத்தில் விதைக்காதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். உங்களுக்கான அடையாளத்தை உருவாக்க, உங்கள் எதிர்மறை எண்ணங்கள் தான் தடையாக இருக்கும். அதை உடைத்து வெளியே வந்தால், வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஏராளமான வேலைகள் உள்ளன. அதில் உங்கள் திறமைக்கு ஏற்ப ஒன்றை தேர்வு செய்து, நம்பிக்கையுடன் சொந்தக்காலில் நில்லுங்கள்.

உங்களின் எதிர்காலத் திட்டம் என்ன?

ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முன்னேற வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக நான் பெரிய நிறுவனங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவர்களும் பணி வழங்கத் தயாராக உள்ளனர். வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இளைஞர்கள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களிலேயே மூழ்கிக் கிடப்பதால் வேலைவாய்ப்புகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். அதனால் எனது யூடியூப் சேனல் மூலமாகவும், பெண்களின் சுய சம்பாத்தியத்துக்கான வழிகளை வழங்கி வருகிறேன்.

பெண்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் சொந்தக் காலில் நிற்பதற்கு என்னால் இயன்ற வகைகளில் எல்லாம் வழிகாட்ட வேண்டும். முக்கியமாக குடும்பத் தலைவிகள், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே எனது எதிர்காலத் திட்டம்.


Next Story