இல்லத்தரசிகளுக்கு ஏற்ற பட்டன் தயாரிப்பு தொழில்


இல்லத்தரசிகளுக்கு ஏற்ற பட்டன் தயாரிப்பு தொழில்
x
தினத்தந்தி 28 Aug 2022 1:30 AM GMT (Updated: 28 Aug 2022 1:31 AM GMT)

பட்டன் தயாரிப்பு தொழில் தொடங்குவதற்கு கடையோ, இடமோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே இந்த தொழிலை மேற்கொள்ளலாம். பட்டன் தயாரிப்புக்கு அக்ரலிக் சீட் கட்டிங், டிரில்லிங் மற்றும் கிரைண்டிங் என சில இயந்திரங்கள் தேவைப்படும்.

ல்லத்தரசிகள், படித்துக் கொண்டிருக்கும் பெண்கள் போன்றோர் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கு ஆர்வமாக இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சியில் புதிய சிந்தனையும், அணுகுமுறையும் அவர்களை வெற்றிகரமான தொழில் முனைவோராக மாற்றும். அந்த வகையில் குறைந்த பணத்தில் செய்யக்கூடிய பட்டன் தயாரிப்பு தொழில் குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

குறைந்த பணம், அதிக வியாபார நுணுக்கம் மற்றும் கற்பனைத்திறனே பட்டன் தயாரிப்பின் மூலதனம். நாளுக்கு நாள் ஆடை உலகில் புதுப்புது மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பட்டன்களுக்கு என தனி இடம் உள்ளது.

பட்டன் தயாரிப்பு தொழில் தொடங்குவதற்கு கடையோ, இடமோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருக்கும் இடத்திலேயே இந்த தொழிலை மேற்கொள்ளலாம். பட்டன் தயாரிப்புக்கு அக்ரலிக் சீட் கட்டிங், டிரில்லிங் மற்றும் கிரைண்டிங் என சில இயந்திரங்கள் தேவைப்படும். இதில் அக்ரலிக் சீட் கட்டிங் இயந்திரம் பட்டனுக்குத் தேவையான அக்ரலிக் சீட்டை வெட்ட உதவும். டிரில்லிங் இயந்திரம் பட்டனுக்கான ஓட்டையை போட உதவும், கிரைண்டிங் இயந்திரம் பட்டனின் வடிவமைப்புக்கு பயன்படும்.

இது தவிர, துணி வகையிலான பட்டன் தயாரிப்புக்கு பட்டன் மேக்கர் மற்றும் பட்டன் ஹோல்டு இயந்திரங்கள் எளிதில் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்தும் முறையும் எளிதானது மற்றும் பாதுகாப்பானது. இவற்றை ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆடை வடிவமைப்பு இயந்திர தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து வாங்கலாம். இவற்றின் விலை அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் வரை இருக்கும்.

இந்த தொழிலின் தொடக்கத்தில் இதற்கென தனியே வேலைக்கு ஆட்கள் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தொழில் நன்றாக செயல்பட ஆரம்பித்த பிறகு உதவிக்கு ஆட்கள் வைத்துக்கொள்ளலாம்.

பட்டன் தொழிலைப் பொறுத்தவரை அதற்கான சந்தைப்படுத்துதல் என்பது எளிதானது. தவிர, இதன் தேவையும் அதிகம். உதாரணமாக அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த பட்டன் கம்பெனிகளுடன் கூட்டுறவு வைக்கலாம் அல்லது தனித்து நீங்கள் தயாரிக்கும் பட்டனை விற்பனை செய்யலாம். முதல் கட்டமாக உங்கள் பகுதியில் உள்ள தையல் கடைகளில், சிறிய சிறிய பேன்சி ஸ்டோர்கள், துணிக்கடைகள் மற்றும் தையல் சார்ந்த மூலப் பொருட்கள் விற்பனைக் கடைகளில் கூட்டுறவு வைத்து நீங்கள் தயாரித்த பட்டனை விற்பனை செய்யலாம்.

மேலும், மதிப்பு கூட்டுதல் முறையில் நீங்கள் தயாரித்த பட்டனை துணிகளில் இணைத்து மெட்டீரியலாகவும் விற்கலாம். துணியால் செய்யப்படும் பட்டன்களுக்கு இந்த வகையான சந்தைப் படுத்துதல் நல்ல பலனைத் தரும்.

பட்டன் தயாரிப்பு தொழிலில் குறைந்த அளவிலான ஒரு முறை முதலீடு, தொடர் புதுமை மற்றும் சரியான முறையில் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை பின்பற்றினால் நல்ல லாபம் கிடைக்கும்.


Next Story