இப்படிக்கு தேவதை


தினத்தந்தி 18 Sep 2022 1:30 AM GMT (Updated: 18 Sep 2022 1:30 AM GMT)

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

1. எனக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. காதல் திருமணம். என் மாமியார் என்னை கணவரிடம் இருந்து பிரித்து, அவருக்கு வேறு ஒரு வசதியான பெண்ணை திருமணம் செய்து வைக்கப் பார்க்கிறார். அதற்கு முன் என் கணவரைத் தூண்டி விட்டு, எனது குடும்பத்தை தகாத வார்த்தைகளில் பேசி, என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். ஆறு மாதமாக பெற்றோர் வீட்டில் இருக்கிறேன். கணவர் என்னிடம் பேசுவதில்லை. நான் என்னை புரிய வைக்க அவரை தொடர்பு கொண்டாலும், அவர் நான் சொல்வது எதையும் கேட்கத் தயாராக இல்லை. அவரது பெற்றோர் என்ன செய்தாலும் அது சரி என்று நம்புகிறார். வேறு பெண்களுடன் பழகுவதில் மட்டுமே எப்போதும் ஆர்வம் காட்டுகிறார். அவர் எங்கள் உறவைப் பற்றியும், அவரது பெற்றோரின் செயலை பற்றியும் உணர்ந்து, என்னிடம் பேசுவதற்கு என்ன வழி?

மற்றப் பெண்களுடன் பழகுவதில் உங்கள் கணவர் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்றால், உங்கள் மீதான மதிப்பும், உங்கள் உறவின் மீதான ஈடுபாடும் அவரிடம் இல்லை என்பது தெளிவாகிறது. உங்கள் மாமியாரின் தூண்டுதலை, தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார்.

இந்த உறவில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது. நம்பகத்தன்மை, பொறுப்பு, ஒருமைப்பாடு போன்ற திருமண பந்தத்துக்கு அடிப்படையான குணங்கள் எதுவும் உங்கள் உறவில் அவரிடம் இல்லை. திருமணமான ஒன்றரை வருடங்களுக்குள், அவரது உண்மையான குணம் தெரியவந்தது நல்லதே. இந்த உறவைத் தொடருவது பயனுள்ளதா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உணர்வுப்பூர்வமாக யோசிக்காமல், அறிவுப்பூர்வமாக சிந்தியுங்கள்.

2 . எனக்கு 27 வயது ஆகிறது. வீட்டில் இருந்தபடியே அரசு வேலைக்கு படித்து வருகிறேன். நான் ஒருவரை காதலிக்கிறேன். எனக்கு அவர் மீது எதிர்மறையான எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அவர் வேறு யாரிடமாவது பேசுகிறாரா? என்று தேவை இல்லாத சந்தேகம் வருகிறது. ஆனால், அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்று எனக்குத் தெரியும். இந்த எண்ணத்தை எப்படி மாற்றுவது? இதில் இருந்து எப்படி வெளியே வருவது? வழிகாட்டுங்கள்.

அவர் மற்ற பெண்களுடன் பேசிய அல்லது பழகிய விதம் உங்களை சந்தேகத்தோடு பார்க்கச் செய்கிறதா? நீங்கள் பாதுகாப்பற்று உணர்கிறீர்களா? எனில் வெளிப்படையாக உங்கள் மனதில் இருப்பது குறித்து அவருடன் பேசுங்கள். அவரது எண்ணங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அதன்பிறகும் உங்கள் சந்தேகக் குணம் அதிகமானால், உளவியல் ஆலோசகரை அணுகுங்கள்.



வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story