இப்படிக்கு தேவதை


தினத்தந்தி 18 Dec 2022 1:30 AM GMT (Updated: 18 Dec 2022 1:30 AM GMT)

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

கேள்வி: எனக்கு 35 வயது. கடந்த சில மாதங்களாக இறந்துபோன எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து கனவில் வருகின்றனர். கனவு கலைந்து மீண்டும் உறக்கத்துக்குச் சென்றாலும், தொடர்ந்து அது போன்ற கனவுகளே வந்துகொண்டு இருக்கின்றன. இதனால் நிம்மதியான தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன். பகல் முழுவதும் அதே சிந்தனையே மனதில் ஓடுகிறது. எனக்கு நல்ல தீர்வு கொடுங்கள்.

பதில்: உங்கள் வாழ்க்கையில் தற்போதுள்ள சில பிரச்சினைகளைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். அதில் இருந்து மீள்வதற்கு மற்றவரின் ஆதரவு உங்களுக்கு தேவைப்படலாம். இதை மனதில் வைத்தபடியே நீங்கள் உறங்கச் செல்வீர்கள். எந்தவொரு உணர்ச்சிகரமான வலியில் இருந்தும் நம்மை பாதுகாக்கும் திறன் நமது மனதுக்கு இருக்கிறது. எனவே தூங்கும்போது, மறைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களை மனம் உங்கள் காட்சிக்கு கொண்டுவருகிறது. கனவுகள் மூலம் நீங்கள் சுயநினைவு இல்லாத நிலைக்கு செல்வீர்கள். உங்களுக்கு உதவக்கூடிய மற்றும் ஆதரவு அளிக்கக்கூடிய நபர்களை உங்களை அறியாமல் கனவில் தேடுவீர்கள். தற்போது வாழும் நபர்கள் மூலம் உங்களுக்கு ஆதரவு கிடைத்தாலோ அல்லது பிரச்சினைகள் தீர்ந்தாலோ இதுபோன்ற கனவு வராது.

கேள்வி: பாலியல் குற்றங்களுக்கு காரணம், ஆண்களின் பார்வை தவறாக இருப்பதா அல்லது பெண்கள் ஆடை அணியும் முறை தவறாக இருப்பதா? அவ்வாறெனில் சிறு குழந்தைகள் எவ்வித கவர்ச்சி ஆடையும் அணிவது இல்லையே. அவர்களுக்கு ஏன் பாலியல் துன்புறுத்தல் நிகழ்கிறது? உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

பதில்: நாகரிக சமூகத்தில், பெண்கள் வெளிப்படையான ஆடைகள் அணிவதால் மட்டுமே பாலியல் குற்றங்கள் நடப்பதாக நினைப்பது சரியாக இருக்காது. அதிகாரப் பிரயோகம், கட்டுப்பாடு, துன்புறுத்துபவர்களின் தவறான ஆளுமை, பழிவாங்குதல் போன் றவை பாலியல் துன்புறுத்தலுக்கு வழிவகுக்கும் காரணிகள் ஆகும். எந்தவொரு பாலியல் துன்புறுத்தலுக்கும் உடல் ஈர்ப்பு முக்கியமான காரணமாகும். கவர்ச்சியான ஆடைகள் அணிவது இந்த ஈர்ப்புக்கு வழிவகுக்கும். பாலியல் துன்புறுத்தல் நடப்பதற்கான பல காரணிகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story