இப்படிக்கு தேவதை


தினத்தந்தி 29 Jan 2023 1:30 AM GMT (Updated: 29 Jan 2023 1:30 AM GMT)

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

1. என் ஒரே மகனுக்கு 35 வயது ஆகிறது. 15 வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் இருந்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே மீண்டு வந்தான். இருந்தாலும், அவனால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டார்கள். அவனுடைய நண்பர்களுக்குத் திருமணமாகி அவர்கள் குடும்பத்தோடு வாழும் நிலையில், இவன் தனிமரமாகவே இருப்பது வேதனை அளிக்கிறது. இதற்கு தீர்வு இருக்கிறதா? என் மகனுக்கு திருமணம் செய்ய முடியுமா?

உங்கள் மகனுக்கு ஏற்பட்ட விபத்து, அவரது பாலியல் வாழ்க்கையில் மாற்ற முடியாத தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இருப்பினும், திருமணத்தில் தாம்பத்யம் ஒரு முக்கிய அங்கமாகும். அவரால் அதில் ஈடுபட முடியாது என்பதை தெரிவிக்காமல், ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சரியானது அல்ல.

உடலுறவில் ஆர்வம் காட்டாத மற்றும் திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண்கள் பலர் இருக்கிறார்கள். இன்றைய காலத்தில், கணவன்-மனைவி தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமல், ஒருவருக்கு ஒருவர் நல்ல துணையாக மட்டும் வாழும் திருமணங்களும் நடக்கின்றன. ஆனால், இது இருவரின் மனமார்ந்த சம்மதத்துடன் நடைபெற வேண்டும். தோழமையே இத்தகைய திருமணங்களின் குறிக்கோள். அத்தகைய திருமணத்தில் உங்கள் மகனுக்கு விருப்பம் இருந்தால், அதற்கு சம்மதிக்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்கலாம்.

2. நான், அன்பான கணவர், அழகான 2 வயது பெண் குழந்தை என்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். சில மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டுக்கு ஒரு தம்பதி குடிவந்தனர். அவர்களுக்கு குழந்தை இல்லை. எனவே என் மகளுடன் மிகவும் அன்பாக பழகி வருகின்றனர். சமீபகாலமாக என் மகள் என்னுடன் இருப்பதைவிட, அவர்களோடு இருக்கும் நேரம் அதிகரித்து வருகிறது. அவர்களை 'அம்மா, அப்பா' என்று கூப்பிடுகிறாள். இது எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? ஆலோசனை கூறுங்கள்.

உங்கள் பாதுகாப்பின்மை உணர்வு புரிகிறது. பெற்றவர்களைப் போல அண்டை வீட்டார் உங்கள் மகளின் மீது பாசத்தைக் காட்டுகின்றனர். கண்டிப்பு இல்லாமல் அன்பை பொழியும் நபர்களிடம் குழந்தைகள் ஈர்க்கப்படுவது இயல்பானது. உங்கள் குழந்தைக்கு இந்த சூழ்நிலையின் சிக்கலான தன்மையைப் புரிந்துகொள்ளும் வயது இல்லை. ஆனால், அவள் அவர்களை 'அம்மா, அப்பா' என அழைக்கிறாள் என்றால், அவ்வாறு அழைப்பதற்கு அவர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது உங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்பதை, அவர்களிடம் மென்மையாக தெரியப்படுத்துங்கள் அவர்கள் விரும்பினால், உங்கள் மகள் அவர்களை 'அத்தை, மாமா' என அழைக்கலாம் என்று கூறுங்கள். ஆரம்பத்தில் இருந்தே உறவுகளில் எல்லைகளை வரையறுக்க வேண்டும். இதனால், பிற்காலத்தில் யாருடைய மனதும் புண்படாமல் தடுக்க முடியும்.

வாசகிகள் தங்கள் மனதை வருத்திக்கொண்டிருக்கும் கேள்விகளுக்கு தீர்வு காண எங்களுக்கு எழுதலாம். உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

'தேவதை - இப்படிக்கு தேவதை பகுதி',

தினத்தந்தி, 86, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600007.

மின்னஞ்சல்: devathai@dt.co.in

டாக்டர் சங்கீதா மகேஷ்,

உளவியல் நிபுணர்.


Next Story