பாதாம் ஷிரோ


பாதாம் ஷிரோ
x
தினத்தந்தி 11 Sep 2022 1:30 AM GMT (Updated: 11 Sep 2022 1:31 AM GMT)

உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை சேர்க்கும் பாதாம் பருப்பை முதன்மையாகக்கொண்டு ‘பாதாம் ஷிரோ’ தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ஈ மற்றும் புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான இனிப்பு இது. இதன் செய்முறைத் தொகுப்பை இங்கே காணலாம்.

ண்டிகைக் காலம் ஆரம்பமாகிவிட்டது. இனிப்பும், மகிழ்ச்சியும் இல்லங்கள் தோறும் நிறைந்திருக்கும் இந்த தருணங்களில், தயாரிப்பதற்கு ஏற்றது 'பாதாம் ஷிரோ'. இது வட இந்தியாவில் அதிகமாக சுவைக்கப்படும் இனிப்பு ஆகும்.

உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை சேர்க்கும் பாதாம் பருப்பை முதன்மையாகக்கொண்டு 'பாதாம் ஷிரோ' தயாரிக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ஈ மற்றும் புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான இனிப்பு இது. இதன் செய்முறைத் தொகுப்பை இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள்:

பாதாம் - 100 கிராம்

காய்ச்சிய பால் - ½ லிட்டர்

சர்க்கரை - 6 தேக்கரண்டி

ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி

குங்குமப்பூ - 1 கிராம்

நெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதன் மேல் தோலை உரித்து, மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், அதில் பாதாம் விழுதை சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக நெய் ஊற்றி அடிப்பிடிக்க விடாமல் பாதாம் பொன்னிறமாக மாறும் வரை நன்றாகக் கிளறவும். பின்னர் அதில் குங்குமப்பூ போட்டு காய்ச்சியப் பாலை சேர்க்கவும். பின்பு சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கிளறி, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

கலவை வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும். இப்போது பாதாம் ஷிரோ தயார். அதன் மேல் சிறிது பொடித்த பாதாம் மற்றும் குங்குமப்பூத் தூவி பரிமாறவும்.


Next Story