தயிர் சாண்ட்விச்


தயிர் சாண்ட்விச்
x
தினத்தந்தி 26 March 2023 1:30 AM GMT (Updated: 26 March 2023 1:30 AM GMT)

சுவையான தயிர் சாண்ட்விச், தயிர் சட்னி மற்றும் தயிர் ரசம் ஆகிய ரெசிபிகளின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

யிர் சாண்ட்விச்

தேவையான பொருட்கள்:

கெட்டியான தயிர் - 400 கிராம்

குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - ½ கப்

கேரட் துருவல் - ½ கப்

வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1

கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 கைப்பிடி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

சாட் மசாலா - ½ தேக்கரண்டி

வெண்ணெய் - சிறிதளவு

பிரட் துண்டுகள் - 2

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

2 கப் கெட்டியான தயிரை சுத்தமான, மெல்லிய பருத்தித் துணியில் போட்டு சிறு மூட்டையாகக் கட்டித் தொங்க விடவும். ஒரு மணி நேரம் கழித்து தயிரில் இருந்த தண்ணீர் முழுவதும் வடிந்து 'கிரீம்' போல் மாறி இருக்கும். அதனை ஒரு பாத்திரத்தில் கொட்டவும். அதனுடன் பொடிதாக நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, துருவிய கேரட், மிளகாய்த்தூள், உப்பு, சாட் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

தோசைக் கல்லில் சிறிதளவு வெண்ணெய் தடவி உருகியதும், பிரட் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும். பின்பு அதில் ஒரு பிரட் துண்டின் மீது நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் தயிர் கலவையை தாராளமாக தடவவும். அதன் மேல் மற்றொரு பிரட் துண்டை மூடி வைத்தால் 'தயிர் சாண்ட்விட்ச்' தயார்.

தயிர் சட்னி

தேவையான பொருட்கள்:

கெட்டியான தயிர் - ¾ கப்

கொத்தமல்லித்தழை - 1 கப்

புதினா - ¼ கப்

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 1 பல்

இஞ்சி - 1 அங்குல துண்டு

எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

சீரகப்பொடி - ¼ தேக்கரண்டி

சாட் மசாலா - ¼ தேக்கரண்டி

உப்பு - ¼ தேக்கரண்டி

செய்முறை:

ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, புதினா, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கெட்டியான தயிரை ஊற்றி அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாகக் கலந்தால் 'தயிர் சட்னி' தயார்.

தயிர் ரசம்

தேவையான பொருட்கள்:

கெட்டியான தயிர் - ஒரு கப்

துவரம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

தனியா - ஒரு தேக்கரண்டி

மிளகு - ஒரு தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

தண்ணீர் - ½ கப்

மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

தாளிப்பதற்கு:

காய்ந்த மிளகாய் - ஒன்று

கடுகு - ஒரு தேக்கரண்டி

உளுந்து - ½ தேக்கரண்டி

பெருங்காயப்பொடி - ½ தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பு, தனியா, மிளகு, சீரகம் ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடித்துக்கொள்ளவும். இதனுடன் தயிர், தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். பின்பு இதில் தயிர் கரைசலை ஊற்றி, சூடாக்கி, நுரைக்கும்போது கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கவும்.


Next Story