நுங்கு ரெசிபிகள்


நுங்கு ரெசிபிகள்
x
தினத்தந்தி 9 April 2023 1:30 AM GMT (Updated: 9 April 2023 1:30 AM GMT)

சுவையான நுங்கு ரோஸ்மில்க், நுங்கு பாயசம், மற்றும் நுங்கு புட்டிங் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.

கோடையின் வெப்பத்தை சமாளிப்பதற்கு, இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் ஒன்று நுங்கு. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நுங்கு சீசன் இருக்கும். இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகிய முக்கியமான சத்துக்கள் நுங்கில் நிறைந்திருக்கின்றன. இது உடல் சூட்டைத் தணித்து நாவறட்சியைப் போக்கும். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து, பல்வேறு நன்மைகள் அளிக்கக்கூடிய நுங்கை குழந்தைகள் விரும்பும் வகையில் விதவிதமாக தயாரித்து கொடுக்கலாம். அந்த வகையில், 3 இன் 1 நுங்கு ரெசிபி தயாரிப்பது பற்றி பார்ப்போம்.

தேவைப்படும் பொருட்கள்:

இளசான நுங்கு - 6

பால் - 1½ லிட்டர்

சர்க்கரை - தேவைக்கேற்ப

ரோஸ் எசன்ஸ் - 1 டீஸ்பூன்

பாதாம் - 10

முந்திரி - 10

ஏலக்காய் - 2 (நசுக்கியது)

சைனா கிராஸ் - 1 டீஸ்பூன்

செய்முறை:

நுங்கை சுத்தம் செய்து மிக்சியில் போட்டு, அதனுடன் சிறிது பால் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும். 1 லிட்டர் பாலை அடுப்பில் வைத்து, சிறு தீயில் நன்றாகக் காய்ச்சி பாதியாக சுண்ட வைக்கவும். பின்னர் அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும். இதைக் கொண்டு நுங்கு ரோஸ் மில்க், புட்டிங், பாயசம் என தயாரிக்கலாம்.

நுங்கு ரோஸ்மில்க்:

தயாரித்து வைத்திருக்கும் நுங்கு கலவையுடன், ரோஸ் எசன்ஸ் கலந்து சிறிது நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்து ஜில்லென்று பரிமாறினால் சுவையான 'நுங்கு ரோஸ்மில்க்' தயார்.

நுங்கு பாயசம்:

பாதாம் மற்றும் முந்திரியை சூடான நீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்து மேல் தோலை நீக்கவும். பின்னர் அவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். இந்த விழுதுடன் சிறிது பால் சேர்த்து அடுப்பில் வைத்து சிறு தீயில் கிளறவும். சற்று நேரத்தில் இந்தக் கலவை கெட்டியாக மாறும். இப்போது அதில் ஏலக்காயை சேர்த்து சில நொடிகள் கிளறி அடுப்பை அணைக்கவும். பின்னர் இதனுடன் ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் நுங்கு கலவையை கலக்கவும். அதன் மேல் பொடித்த பாதாம் மற்றும் முந்திரியைத் தூவி சூடாகவோ, குளிர்வித்தோ பரிமாறலாம்.

நுங்கு புட்டிங்:

'அகர் அகர்' என்று அழைக்கப்படும் சைனா கிராசை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சிறு தீயில் கிளறவும். சற்று நேரத்தில் சைனா கிராஸ் முழுவதுமாக தண்ணீரில் கரைந்து விடும். இப்போது அடுப்பை அணைத்து இந்தக் கலவையை ஆற வைக்கவும். பின்னர் அதை நுங்கு கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனை சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி குளிர்பதனப் பெட்டியில் 3 மணி நேரம் வைத்தால் சுவையான 'நுங்கு புட்டிங்' தயார்.


Next Story