கொழுக்கட்டை மற்றும் மோதகம் ஸ்பெஷல்


கொழுக்கட்டை மற்றும் மோதகம் ஸ்பெஷல்
x
தினத்தந்தி 28 Aug 2022 1:30 AM GMT (Updated: 28 Aug 2022 1:31 AM GMT)

உருண்டைகளை, சற்றுத் தடிமனான சப்பாத்தி போன்று திரட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு நடுவில் ஒரு டீஸ்பூன் அளவு பால்கோவாவை வைத்து ஓரங்களை ஒன்றாக இணைத்து மோதகம் போல செய்து கொள்ள வேண்டும்.

பொரித்த பால்கோவா மோதகம்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - ¼ கப்

ரவை - ¼ கப்

எண்ணெய் - 1 டீஸ்பூன் (மாவு பிசைவதற்கு)

உப்பு - சிறிதளவு

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

பால்கோவா - 1 கப் (இனிப்பு சேர்த்தது)

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதா, ரவை, உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதில், சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைய வேண்டும்.

பிசைந்த மாவின் மீது சுத்தமான ஈரத்துணியைக் கொண்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடி வைக்க வேண்டும். பின்பு மீண்டும் ஒருமுறை மாவைப் பிசைய வேண்டும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

உருண்டைகளை, சற்றுத் தடிமனான சப்பாத்தி போன்று திரட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு நடுவில் ஒரு டீஸ்பூன் அளவு பால்கோவாவை வைத்து ஓரங்களை ஒன்றாக இணைத்து மோதகம் போல செய்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தயார்செய்து வைத்திருக்கும் மோதகங்களைப் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இந்த மோதகம், ஒரு வாரம் வரை மொறு, மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

வாழைப்பழ கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

மேல் மாவுக்கு:

கொழுக்கட்டை மாவு - 1 கப்

உப்பு - சிறிதளவு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

பூரணத்திற்கு:

வாழைப்பழம் - 4

தேங்காய் துருவல் - 1 கப்

கண்டன்ஸ்டு மில்க் - ¾ கப்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்

செய்முறை:

வாழைப் பழத்தை இரண்டாக வெட்டி, இட்லி பாத்திரத்தில் போட்டு ஆவியில் 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும். வெந்து ஆறியதும் அதன் மேல் தோலை நீக்கிவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். அதில் கொழுக்கட்டை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து, கட்டி இல்லாமல் கலந்து வேக வைக்க வேண்டும்.

பூரணம் தயாரிப்பதற்கு, ஒரு வாணலியில், நெய் ஊற்றி சூடானதும், அதில் துருவிய தேங்காயைப் போட்டு 7 நிமிடம் வரை வறுக்க வேண்டும். பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, வாணலியின் சூட்டிலேயே வேக வைத்த வாழைப்பழம், கண்டன்ஸ்டு மில்க், நெய், ஏலக்காய்ப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து பூரணத்தைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

இப்போது, மேல் மாவை எடுத்து, அதைச் சிறிய கிண்ணம் போல செய்ய வேண்டும். அதற்கு நடுவில் தயார் செய்து வைத்த பூரணத்தை சிறிது வைத்து, ஓரங்களை மடித்து விட வேண்டும். இவ்வாறு விரும்பிய வடிவில் கொழுக்கட்டை தயார் செய்து மிதமான தீயில், ஆவியில் வேக வைத்து எடுத்தால், வாழைப்பழ கொழுக்கட்டை தயார்.


Next Story